[பொழிலும் கழனியும் புட்கள் எழுந்தொலிக்க ஞாயிறு கீழ்த் திசைத் தோன்றியது.
இறைவன் கோயில் முதலியவற்றில் வலம் புரிச் சங்கும் காலை முரசும் ஒலித்தன.
கோவலன் கவுந்தி யடிகளை வணங்கித் தான் உற்ற இடும்பையை உரைத்து, யான் இந்
நகர் வணிகர்க்கு எனது நிலையை உணர்த்தி வருகாறும், இப் பைந்தொடி நுமது பாதக்
காப்பினள்' என்று கூறினன்; கூறக், கவுந்தி யடிகள் உலகிலே மக்களெய்தும் இன்ப
துன்பங்களின் காரணங்களை எடுத் துரைத்து, முன்னரும் துன்பமுற்றோர் பலர் என்பதற்கு
இராமனை யும் நளனையும் எடுத்துக் காட்டி, நீ அவர்கள்போல்வாயு மல்லை; மனைவியுடன்
பிரியா வாழ்க்கை பெற்றனை ; ஆகலின் வருந்தாது ஏகிப் பொருந்துமிடம் அறிந்து
வருக' என்றனர்; என்றலும், கோவலன் மதிலக வரைப்பிற் சென்று, கடைகழி மகளிர்
காதலஞ் செல்வருடன் காலையிற் புனல் விளையாடியும், நண்பகலிற் பொழில் விளையாட்டயர்ந்தும்,
எற்படுபொழுதில் நிலா முற்றத்திற் சேக்கை மீதிருந்தும், முன்பு தமக்கின்பம்
விளைத்த கார் முதலிய பருவங் களின் வரவை எண்ணி இன்புறும் முதுவேனிற் கடைநாளில்
அரசன்பாற் சிறப்புப் பெற்ற பொற்றொடி மடந்தையருடன் புது மணம் புணர்ந்து செழுங்குடிச்
செல்வரும் வையங் காவலரும் மகிழா நிற்கும் வீதியும், எண்ணெண் கலையு முணர்ந்த
பரத்தையரின் இரு பெருவீதியும், அரசனும் விரும்பும் செல்வத்தையுடைய அங்காடி வீதியும்,
பயன் மிக்க இரத்தினக்கடை வீதியும், பொற்கடை வீதி யும், அறுவை வீதியும்,
கூல வீதியும், நால்வேறு தெருவும், சந்தி யும், சதுக்கமும், மன்றமும், கவலையும்,
மறுகும் திரிந்து காவலன் பேரூரைக் கண்டு மகிழ்ந்து புறஞ்சேரிக்கண் மீண்டனன்.
(இதில் இரத்தினக் கடைத்தெரு கூறுமிடத்தே 180-200 அடிகளில் நவ மணிகளின் இலக்கணம்
கூறப்பெற்றுள்ளது.)]
|
|
|