5
|
நிலந்தரு திருவின் நிழல்வாய்
நேமி
கடம்பூண் டுருட்டுங் கௌரியர் பெருஞ்சீர்க்
கோலின் செம்மையும் குடையின் தண்மையும்
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப்
பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட
மதுரை மூதூர் மாநகர் கண்டாங்
கறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து |
|
நிலம்
தரு திருவின் நிழல் வாய் நேமி - நிலத்திற்குப் பல செல்வத்தினையும் தருகின்ற அருள்
வாய்ந்த ஆணையை, கடம் பூண்டு உருட்டும் கௌரியர் - முறைமையை மேற்கொண்டு செலுத்தும்
பாண்டியர்களுடைய, பெரும் சீர்க் கோலின் செம்மையும் - பெரிய சிறப்பினையுடைய செங்கோலும்,
குடையின் தண்மையும் - குடையினது தண்மையும், வேலின் கொற்றமும் - வேலினுடைய வெற்றியும்,
விளங்கிய கொள்கை - விளங்குதற்கு இடமாகிய கோட்பாட்டினையுடைய, பதி எழுவு அறியாப்
பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் மா நகர் கண்டு-ஆண்டு வாழ்வோர் அவ்விடத்தினின்றும் பெயர்தலை
அறியாத முறைமை மேம்பட்ட பழைய ஊராகிய மதுரை மா நகரத்தினைக் கண்டு, ஆங்கு அறந்தரு
நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பொழில் இடம் புகுந்து - அவ்விடத்து அறத்தினைப்
பிறர்க்கறிவுறுத்தும் உள்ளத்தினையுடைய முனிவர்கள் நிறைந்த புறமதிற்கண் உள்ள மூதூர்ச்
சோலையிடத்துப் புகுந்து ;
மன்னன் குடிகளிடத்து அருளுடையன் ஆயவழி
நிலத்துப் பல் வளமும் பெருகுமாகலின் ''நிலம்தரு திருவின் நிழல்'' என்றார் ; நிழல்
- அருள். மாற்றாரது நிலத்தைத் தரும் வெற்றியாகிய செல்வம் என்றும், ஒளி பொருந்திய
நேமி யென்றும் உரைத்தலுமாம். பதி எழுவறியாமை ஆண்டுப் பல்வளமும் பெருகலான் என்க. பதி
என்பது ஆகுபெயராய் ஆண்டுள்ளாரைக் குறித்து நின்றதெனலும் பொருந்தும். |
|
|