பக்கம் எண் :

6. கொலைக்களக் காதை

       [மாதரி கண்ணகியையும் கோவலனையும் புதிய மனை யொன்றில் இருத்தித் தன் மகள் ஐயையைக் கண்ணகிக்குத் துணையாக வைத்து அடிசிலாக்குதற்கு வேண்டும் பொருள்களை அளிக்க, கண்ணகி நன்கு சமைத்துக் கணவனை முறைப்படி உண்பித்து அவற்கு வெற்றிலை பாக்கு அளித்து நின்றனள். அப்பொழுது கோவலன் கண்ணகியை அருகணைத்து 'நீ வெவ்விய காட்டிலே போந்ததற்கு என் தாய் தந்தையர் என்ன துன்பமுற்றார்களோ' என்று கூறி, தான் முன் நெறி தவறி நடந்தமைக்கு இரங்கி, 'ஈங்கு என்னொடு போந்து என் துயர் களைந்த பொன்னே! கொடியே! புனைபூங் கோதாய்! நாணின் பாவாய்! நீணில விளக்கே! கற்பின் கொழுந்தே! பொற் பின் செல்வி! நான் நின் சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டுபோய் விற்று வருவேன்; மயங்காதிரு' எனத் தேற்றி, அரிதின் நீங்கிச் செல்வானாயினன். செல்பவன் பீடிகைத் தெருவிலே பொற் கொல்லர் நூற்றுவர் பின்வர முன்வந்த ஒரு பொற்கொல்லனைக் கண்டு, விற்பதற்குத் தான் கொணர்ந்த சிலம்பினைக் காட்ட, அப் பொற்கொல்லன் அரசன் மனைவியின் சிலம்பொன்றைக் கவர்ந்தவனாதலால் தனது களவு வெளிப்படு முன் இச் சிலம்பால் தன்மீது உண்டாகும் ஐயத்தைத் தவிர்க்கலாமெனத் துணிந்து 'கோப்பெருந்தேவி அணிதற்கேற்ற இச் சிலம்பினை நான் அரசனுக் கறிவித்து வருங்காறும் இவ்விடத்திருப்பீர்' எனத் தன் மனையின் பக்கத்திலுள்ள கோயிலில் இருத்திச் சென்றனன். சென்றவன், தன் தேவியின் ஊடல் தணித்தற் பொருட்டு அவள் கோயிலை நோக்கிச் சென்றுகொண் டிருந்த பாண்டியன் நெடுஞ்செழியனைக் கண்டு, 'கோயிலில் இருந்த சிலம்பினைத் திருடிய கள்வன் அச் சிலம்புடன் அடியேன் குடிலில் வந்துளான்' என்று கூற, அரசன், 'அவனைக் கொன்று அச் சிலம்பினைக் கொணர்வீர்; எனக் காவலாளர்க் குரைத்தனன். பொற் கொல்லன் மகிழ்ந்து அக் காவலாளருடன் சென்று கோவலனை அணுகி, 'அரசன் ஏவலாற் சிலம்பு காண வந்தோர் இவர்' எனக் கூறி, அச் சிலம்பினைக் காட்டுவித்து, 'முகக்குறி முதலியவற்றால் இவன் கள்வனல்லன்' என்று கூறியவர்களை இகழ்ந்துரைத்து, களவு நூல் கூறும் ஏதுக்களை யெல்லாம் எடுத்துக் காட்டி அவனைக் கள்வனென்று வற்புறுத்தினன் ; அப்பொழுது அறிவற்ற தறுகணனொருவன் தன் கை வாளாற் கோவலனை வெட்டி வீழ்த்தினன். (இதில், கண்ணகி கோவலனை உண்பித்ததும், கோவலன் கூற்றுக்கு மறு மொழி கூறியதும் அவளது உயர்ந்த பண்புகளை வெளிப்படுத்துகின்றன.]