பக்கம் எண் :

7. ஆய்ச்சியர் குரவை



                     கருப்பம்

குடத்துப்பா லுறையாமையும் குவியிமி லேற்றின் மடக்கண்ணீர் சோர்தலும் உறியில் வெண்ணெ யுருகாமையும் மறிமுடங்கி யாடாமையும் மான்மணி நிலத்தற்று வீழ்தலும் வருவதோர் துன்ப முண்டென மகளை நோக்கி மனமயங்காதே மண்ணின் மாதர்க்கணி யாகிய கண்ணகியுந் தான் காண ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம்முன்ஆடிய வாலசரிதை நாடகங்களில் வேல் நெடுங்கண் பிஞ்ஞையோ டாடிய குரவையாடுதும் யாமென்றாள் கறவை கன்று துயர் நீங்குகவெனவே ;


உரை

       கருப்பம் - இவை கேட்டிற்குக் கருப்பம் ; மேலே கூறுவன வற்றிற்குக் காரணம் என்றுமாம்.

       "குடத்துப்பால் உறையாமையும் ..... நீங்குகவெனவே" தாழிக்கண் பால் உறையாமையானும், திரண்ட முரிப்பினையுடைய ஆனேற்றின் கண்களிலிருந்து நீர் உகுதலானும் , உறிக் கண் வெண்ணெய் உருகாமையானும், ஆட்டு மறிகள் துள்ளி விளையாடாமையானும், பசுக்களின் கழுத்து மணிகள் அற்று நிலத்து வீழ்தலானும் வருவதோர் துன்பம் உண்டென்று சொல்லி, மகளை நோக்கி, ' உள்ளங் கவலற்க ; இந் நிலத்து மாதர்க்கு அணியாக விளங்கும் கண்ணகியும் காணும் வண்ணம் முன்னர் ஆயர்பாடியில் எருமன்றத்தின்கண் கண்ணன் தம் முனாகிய பலராமனுடன் விளையாடிய பால சரித நாடகங்களுள் வேல் போலும் நெடிய கண்களையுடைய நப்பின்னையோடாடிய குரவைக் கூத்தினை, பசுக்களும் கன்றுகளும் துன்பம் ஒழி வனவாக வென்று கூறி யாம் ஆடுவோம்' என்றாள் ;

       உறையாமையும் முதலிய எண்ணும்மைகளில் மூன்றனுருபு விரித்துரைக்க. மாயவனுடன் என்னும் மூன்றன் சொல்லுருபினைத் தம்முன் என்பதனோடு இயைக்க. கண்ணகியும் காண ஆடுதும் என்றாளென்க. தான், அசை. குரவையாவது எழுவரேனும். ஒன் பதின்மரேனும் கைகோத்தாடுங் கூத்து.