50
|
வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும்
ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டீமின் ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டைக்க
பாய்திரை வேலிப் படுபொருள் நீயறிதி காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன்
கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய் ஒள்ளெரி யுண்ணுமிவ் வூரென்ற தொருகுரல்.
|
|
வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும் ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீமின்
ஆய மடமகளிர் எல்லீரும் கேட்டைக்க - மேல்வருந் தீமை நீங்குதல் வாய்த்தற் பொருட்டான்
எடுத்த குரவைக்கூத்தினுள் வந்து திரண்ட இடைக்குலப் பெண்டிர் யாவிரும் கேண்மின் இடைக்குலப்
பெண்டிர் யாவிரும் கேட்க, பாய் திரை வேலிப் படுபொருள் நீ அறிதி காய் கதிர்ச் செல்வனே
கள்வனோ என் கணவன் - காய்கின்ற கதிர்களையுடைய செல்வனே பரந்த அலைகளையுடைய கடலை
வேலியாகவுடைய இவ் வுலகத்துத் தோன்றும் பொருள்கள் யாவற்றையும் நீ அறிவாய் ஆகலான்
நீயறிய என் கணவன் கள்வனோ சொல்லென்றாள், கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய்
ஒள்ளெரி உண்ணும் இவ்வூர் என்றது ஒருகுரல் - என்றவட்கு ஓர் அசரீரி கரிய கயல்போலுங்
கண்களையுடைய மாதே நின் கணவன் கள்வனல்லன் அவனைக் கள்வனென்ற இவ்வூரினை விளக்கம்
பொருந்திய தீ உண்ணும் என்று கூறிற்று என்க.
கேட்டீமின் - கேண்மின் ; வினைத்திரிசொல்,
கேட்டை என்னும் வினையசைச்சொல் ஈற்றுவியங்கோள் விகுதி பெற்றுக் கேட்க வென்னும்
பொருட்டாயிற்று. கேட்டீமின் கேட்டைக்க என இரட்டித்தது யாவருங் கேட்டற்பொருட்டாம்.
பாய்தல் - பரத்தல். முதற்கண் கள்வனோ என்றதன்கண் ஓ வினாப்பொருட்டு ; பின்னதன்
ஓ பிரிநிலை. உண்ணும், முற்று. இவ்வூர் - கள்வனென்று கூறிய இவ்வூர்.
இது
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா.
துன்ப மாலை முற்றிற்று
. |
|
|