பக்கம் எண் :


  2. மனையறம்படுத்த காதை

           [அரிய தவத்தினைச் செய்தோர் அதன் பயனாய இன்பத்தை நுகர்தற்கு உத்தர குருவில் தோன்றுவது போலப் புகார் நகரிலே கொழுங்குடிச் செல்வர்க்குத் தோன்றிய கண்ணகியும் கோவலனும் எழுநிலை மாடத்தின் இடைநிலத்தில் இருந்தபொழுது பலவகைப் பூக்களின் மணத்துடன் கூடித் தென்றல் வந்துற, இருவரும் மகிழ்ச்சி மிக்கு நிலாமுற்றத்தை அடைந்தனர். இருவருடைய தாரும் மாலை யும் ஒன்றோடொன்று மயங்கின. கோவலன் தீராக்காதலுடன் கண்ணகியின் முகத்தை நோக்கி, அவளுடைய நுதல், புருவம், கண், இடை, நடை, சொல் முதலியவற்றைப் பொருந்திய உவமைகளாற் புனைந்துரைத்து, மற்றும் "மாசறு பொன்னே! வலம்புரிமுத்தே! காசறு விரையே! கரும்பே! தேனே! அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே' நின்னை, 'மலையிடைப் பிறவா மணியே யென்கோ? அலை யிடைப் பிறவா அமிழ்தே யென்கோ? யாழிடைப் பிறவா இசையே யென்கோ?" என்று பலபடப் பாராட்டி, அவளுடன் களிப்புற்று ஒழுகுங்கால், கண்ணகி விருந்து புறந்தருதல் முதலிய இல்லறவாழ்க் கையில் மேம்படுதலைக் காண விரும்பிய கோவலன் தாய் பலவகைச் செல்வங்களோடும், உரிமைச் சுற்றமோடும் அவர்களைத் தனியே இருக்கச்செய்ய, வியத்தகு சிறப்புடன் இல்லறம் நடாத்துவதிற் கண்ணகிக்குச் சில யாண்டுகள் கழிந்தன.]