[கதிரோன் கூறியதைக்
கேட்ட கண்ணகி, மிக்க சினங்கொண்டு, தன்பால் இருந்த மற்றொரு சிலம்புடன் புறப்பட்டு
மதுரையின் வீதிவழியே சென்று, அங்குள்ள மகளிரை நோக்கிப் பலவாறு புலம்பி, 'என்
கணவனை முன்போலக் கண்டு அவன் கூறும் நல்லுரையைக் கேட்பேன்; அங்ஙனம் கேளேனாயின்
என்னை இகழுமின்' என்று சூள் கூறிச் சென்று, வெட்டுண்டு கிடந்த கோவலனைச் சிலர்
காட்டக் கண்டு அளவிலாத் துயரெய்தி, அவனை முன்னிலையாக்கிப் பலவாறு புலம்பி
அவன் உடம்பைத் தழுவிக் கொள்ள, அவ்வளவில் அவன் எழுந்து நின்று 'மதிபோன்ற
நின் முகம் வாடியதே' என்று சொல்லிக் கையாள் அவள் கண்ணீரை மாற்ற, அவள் கணவனுடைய
அடிகளை இரண்டு கையாலும் பற்றி வணங்கினாள் ; அப்பொழுது அவன் 'நீ இங்கிருக்க'
என்று சொல்லி, அவ் வுடம்பை யொழித்து, அமரர் குழாத்துடன் துறக்கம் புகுதற்குச்
சென்றான். கண்ணகி 'என் சினந் தணிந்தன்றிக் கணவனைக் கூடேன்; தீமையுடைய அரசனைக்
கண்டு இதனை உசாவுவேன்' என்று அரசன் கோயில் வாயிலை அடைந்தாள். (இதன் அவலச்சுவை
கன்னெஞ்சையும் கரைக்க வல்லது).]
|
|
|