[கோப்பெருந்தேவி தீக்கனாப் பல கண்டு அவற்றை அரியணை மீதிருந்த தன் கணவனிடம்
கூறிக்கொண்டிருந்தாள். அப்பொழுது பெருஞ் சீற்றத்துடன் வாயிலை யடைந்த கண்ணகி
தன் வரவை வாயில் காப்போனால் அரசனுக்கு அறிவித்துச் சென்று முன்னின்று, அவன்
கேட்பத் தன் ஊர், பெயர் முதலியவற்றையும், தன் கணவனை அவன் ஆராயாது கொன்ற
கொடுங்கோன்மையையும் அஞ்சாது இடித்துரையால் எடுத்தியம்பி, தன் கணவன் கள்வனல்ல
னென்று தெரிவித்தற்பொருட்டுத், தன் சிலம்பினுள் உள்ள பரல் மாணிக்கம் என்றாள்
; அரசன் தன் தேவி சிலம்பின் பரல் முத் தென்று கூறி, கோவலனிடமிருந்து கொண்ட
சிலம்பை வருவித்து வைக்க, கண்ணகி அதனை உடைத்தாள் ; உடைக்க, அதிலுள்ள மாணிக்கப்
பரல் அரசன்முன் தெறித்தது ; அது கண்ட நெடுஞ் செழியன் நடுநடுங்கி, 'இழிந்த பொற்கொல்லன்
சொற் கேட்ட கொடுங்கோன்மையையுடைய யானோ அரசன்! யானே கள்வன் ; தென்புலம்
காவல் என் முதற் பிழைத்தது ; இன்றே கெடுக என் ஆயுள்' எனக் கூறித் துயருற்று மயங்கித்
தான் அமர்ந்த அரசு கட்டிலில் வீழ்ந்து துஞ்சினான் ; அது கண்ட அரசன் மனைவி
கணவனை இழத்தலாகிய கொடுந் துன்பத்தை எண்ணி வருந்தி, அவன் இணையடிகளைத் தொழுது
தானும் விழ்ந்தனள்.]
|
|
|