[கண்ணகி
நடுங்கி வீழ்ந்த கோப் பெருந்தேவியை விளித்து, 'யான் ஒப்பற்ற கற்புடை மகளிர்
பலர் பிறந்த பதியின்கட் பிறந்தேன் ; யானும் ஓர் பத்தினியாயின் அரசோடு
மதுரையையும் ஒழிப்பேன் ' என்று கூறி, அவ்விடம் விட்டு நீங்கி, 'மதுரையிலுள்ள
மகளிர் மைந்தர் கடவுளர் மாதவர் அனைவீரும் கேண்மின் ; என் காதலனைக் கொன்ற
அரசன் நகரினைச் சீறினேன் ஆகலின் யான் குற்றமிலேன் 'என்றுரைத்து, தனது இடக்
கொங்கையைக் கையாலே திருகி, மதுரையை மும்முறை வலம் வந்து, சுழற்றி எறிந்தாள்
; அப்பொழுது அங்கியங்கடவுள் வெளிப்பட்டு, 'பத்தினியே, நினக்குப் பிழை செய்த
நாளில் இந் நகரினை எரியூட்ட முன்பே ஓர் ஏவல் பெற்றுளேன் ; இதன் கண் பிழைத்தற்குரியார்
எவ்வெவர்' என்று உசாவ, 'பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர் மூத்தோர்
குழவி எனும் இவரைக் கைவிட்டுத் தீயோர் பக்கம் சேர்க' என்று கண்ணகி ஏவக்
கூடல் நகரிலே அழல் மண்டிற்று. (இதன்கண் புகார் நகரிலிருந்த பத்தினிப் பெண்டிர்
எழுவர் வரலாறு கூறப்பட்டிருப்பது அறிந்து மகிழ்தற்குரியது.) ]
|
|
|