[கண்ணகிபால் வந்து தோன்றிய மதுராபதி அவளை நோக்கி 'யான்
மதுரையின் அதி தெய்வம் ; நின் கணவற் குண்டாகிய துன் பத்தால் எய்திய கவற்சியுடையேன்
; இந் நகரத்திருந்த பாண்டி மன்னர்களில் ஒருவரேனும் சிறிதும் கொடுங்கோன்மை
யுடையரல்லர் ; இந் நெடுஞ் செழியனும் 'மறை நாவோசையல்லது யாவதும் மணி நா வோசை
கேட்ட' றியாத செங்கோன்மை யுடையனே ; இவ்வாறு நிகழ்ந்ததற்குக் காரணம் ஊழ்வினையே
யாகும் ; அதன் வரலாற்றைக் கூறுவேன் கேள் ; முன்பு கலிங்க நாட்டிலுள்ள சிங்கபுரத்தினும்
கபிலபுரத்தினு மிருந்த தாய வேந்தராகிய வசு என்பவனும் குமரன் என்பவனும் தம்முள்
பகை கொண்டு ஒருவரை யொருவர் வெல்லு தற்கு முயன்றுகொண்டிருந்தனர் ; அதனால் இருவரூர்க்கும்
இடைப் பட்ட ஆறு காத எல்லையில் யாரும் இயங்காதிருக்கவும், சங்கமன் என்னும்
வணிகன் பொருளீட்டும் வேட்கையால் தன் மனைவியோடு காவிற் சென்று சிங்கபுரத்தின்
கடை வீதியில் அரிய கலன்களை விற்றுக்கொண்டிருந்தனன் ; அப்பொழுது அரசனிடத்துத்
தொழில் செய்துகொண்டிருந்த பரதன் என்பவன் அவ் வணிகனைப் பகைவனுடைய ஒற்றனென்று
பற்றிச் சென்று அரசனுக்குக் காட்டிக் கொன்றுவிட்டனன் ; கொல்லப்பட்ட சங்கமன்
மனைவியாகிய நீலி என்பவள் மிக்க துயரத்துடன் முறையிட்டுக்கொண்டு எங்கணும் திரிந்து
பதினான்கு நாள் சென்றபின் ஓர் மலையின் உச்சியை அடைந்து கணவனைச் சேர்தற்
பொருட்டுத் தன் உயிரைவிடத் துணிந்தவள் 'எமக்குத் துன்பஞ் செய்தோர் மறுபிறப்பில்
இத் துன்பத்தை யடைவாராக' எனச் சாபமிட்டிறந்தனள் ; அப் பரதன் நின் கோவலனாகப்
பிறந்தான் ; ஆதலால் நீங்கள் இத் துன்பத்தை அடைந்தீர்கள் ; நீ இற்றைக்குப்
பதினான்காவது நாளில் பகல் சென்றபின் நின் கணவனைக் கண்டு சேர்வாய்' எனச்
சொல்லிச் சென்றது சென்றபின், கண்ணகி 'கீழ்த்திசைவாயிற் கணவனொடு புகுந்தேன்,
மேற்றிசைவாயில் வறியேன் பெயர்வேன்' எனக் கையற்று ஏங்கி மதுரையை நீங்கி,
வையைக்கரை வழியே மேற்றிசை நோக்கிச் சென்று, மலைநாட்டிலுள்ள திருச்செங்குன்
றென் னும் மலை மீதேறி ஒரு வேங்கை மரத்தின்கீழ் நின்று, பதினாலாம் நாட் பகற்பொழுது
சென்றபின் அங்கே தெய்வ வடிவுடன் போந்த கோவலனைக் கண்டு அவனுடன் வானவூர்தியிலேறித்
தேவர்கள் போற்றத் துறக்கம் அடைந்தனள். (இதில் பாண்டியர்களுடைய நீதியை உணர்த்துதற்குப்
பொற்கை வழுதியின் வரலாறும், சேரன் பாற் பரிசில் பெற்றுவந்த சோணாட்டுப்
பார்ப்பானாகிய பராசரன் என்பானுக்குத் தங்கால், வயலூர் என்னும் ஊர்களை அளித்த
மற்றொரு பாண்டியன் வரலாறும் கூறப்பட்டுள்ளன. மதுரை இன்ன நாளில் எரியுண்ணும்
என்பதோர் உரையுண்டென்பதும் கூறப்பட்டுளது.)]
|
|
|