பக்கம் எண் :


13. கட்டுரை காதை




175
வாரொலி கூந்தல்நின் மணமகன் தன்னை
ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவிற் காண்டல் இல்லென
மதுரைமா தெய்வ மாபத் தினிக்கு
விதிமுறை சொல்லி அழல்விடு கொண்டபின்


173
உரை
178

      வார் ஒலி கூந்தல் நின் மணமகன் தன்னை - நீண்டு தழைந்த கூந்தால் நின் கணவனை, ஈரேழ் நாளகத்து எல்லை நீங்கி - பதினான்கு நாளளவு கழிந்த பின்னர், வானோர் தங்கள் வடிவின் அல்லதை ஈனோர் வடிவிற் காண்டல் இல் என - தேவர்களுடைய வடிவத்துக் காண்பதல்லது இவ்வுலக மக்களுடைய வடிவத்துக் காணுதல் இல்லையென்று, மதுரை மா தெய்வம் மாபத்தினிக்கு விதிமுறை சொல்லி அழல் வீடு கொண்ட பின் - மதுரைத் தெய்வமாகிய பெருமையுடைய மதுராபதி பெருமை மிக்க கற்புடைய கண்ணகிக்கு ஊழ்வினையின் தன்மையினைச் சொல்லித் தீயின் விடுதலையைக் கொண்ட பின்னர் ;

      அல்லதை, ஐ இடைச்சொல், ஈனோர் - இவ்வுலகோர் ; ஈன் - இவ்விடம். அழல் வீடாவது தீ யெரித்தலை நிறுத்தல். "வாரொலி... லில்லென" என்னும் நான்கடியும் இந் நூற் பதிகத்துள் (50--3) வந்துள்ளமையுங் காண்க.