உயி்ர்களுக்கு
வருகின்ற துன்பங்களுக்கும் காரணம் காம வெகுளி
மயக்கங்களே என்னும் கோட்பாட்டையுடைய பௌத்த நூலாசிரியர்
அக்குற்றங்களைத் தமது இலக்கியத் தலைவர்பாலே வைத்துக்
காட்டுவதனையாம் மணிமேகலையினும் காணலாம். மணிமேகலையைப்
பின்பற்றி எழுந்த இக் குண்டலகேசியின் வரலாறும் ஓரளவு மணிமேகலை
வரலாற்றினையே ஒத்திருத்தல் இயல்பே.
இனி,
நீலகேசியினின்றும் எடுத்து மேலே குறிக்கப்பட்டுள்ள
குண்டலகேசிச் செய்யுள் முதனினைவுக் குறிப்புக்களுக்குரிய அச்செய்யுட்கள்
ஒவ்வொன்றும் தத்தமக்குள் கொண்டிருந்த பொருள்கள் இன்னின்னவை
என்பதனையும் அந்நூலின்கண்
மொக்கவன் கூற்றாக வருகின்ற
செய்யுட்களாலும் சிறந்த உரையாசிரியராகிய சமயதிவாகரர் உரை
விளக்கங்களானும் யாம் நன்குணரலாம். குண்டலகேசிச் செய்யுட்களின்
அம் முதற்குறிப்புக்களின்சொல்லமைதியைக் காணும்பொழுதே
அவையிற்றின்முழுவுருவங்களையும், ஏன்? அப் பெருங்காப்பியத்தின்
முழுவுருவத்தையும் காணப் பெற்றிலேமே ! என்று தீந்தமிழ்ச்
சுவையுணர்வார் நெஞ்சகம் வருந்துதல் ஒருதலை. கழிந்தது கருதலிற்
பயனென்னை? இற்றைநாள் நம் கைக்கெட்டிய அப் பத்தொன்பது
செய்யுட்களையேனும் அக் குண்டலகேசியின் நினைவுச் சின்னமாகப்
போற்றி வைப்பது நங்கடமை என்றுணர்ந்த சைவசித்தாந்த நூற்பதிப்புக்
கழகத்தினர் அவையிற்றிற்கு உரையும் வரைவித்து அழகிய நூலுருவந்
தந்து இப்பொழுது வெளியிடுகின்றனர். இதற்குத் தமிழுலகம் அக்
கழகத்தார்க்கு நன்றிக் கடன் உடையதாக அச் செய்யுட்கு உரை எழுதும்
பணியை எம்பாற் றந்தமைக்கு யாமும் பொதுவாக அக் கழகத்தார்க்கும்
சிறப்பாக அக்கழகப்பொறுப்பாளர் உயர்திரு வ. சுப்பையா பிள்ளை
யவர்கட்கும் பெரிதும் நன்றி செலுத்தும் கடப்பாடுடையேம். வாழ்க
குண்டலகேசி வண்புகழ் ! வாழிய செந்தமிழ்.
|
இங்ஙனம்
உரையாசிரியன்,
பொ. வே. சோமசுந்தரன்.
|
|