கம்பராமாயணம் தோற்றுவாய் உடையவர் ஸ்ரீராமானுஜரைப் பாடவந்த திருவரங்கத்தமுதனார் ‘படிகொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடிகொண்ட கோயில் இராமானுசன்’ என்று பாடினார். உலகம் முழுவதையும் தன் புகழால் அகப்படுத்திக் கொண்டது எனவும் பக்தி வெள்ளம் எனவும் இராமாயணத்தை திருவரங்கத்தமுதனார் சிறப்பிக்கிறார். இந்தப் புகழின் தரமும் திறமும் இவையெனத் தெரிந்த சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் “கங்கையும் காவேரியும் ஓடும் வரையில் சீதா ராம சரிதம் பாரத நாட்டில் ஆண் பெண் குழந்தைகளனைவரையும் தாய்போல் பக்கத்திலிருந்து காக்கும்” என்று தம் சக்ரவர்த்தித்திருமகன் என்ற நூலின் முன்னுரையில் தெளிவுபடுத்தியிருக்கிறார். பாரதநாட்டில் ‘ராமாயணம்’ என்றாலே ஆதிகாவியம் எனப்படும் வான்மீக ராமாயணத்தையே நினைப்பது வழக்கம். பழமையான இந்த மரபை உணர்ந்தமையாலும். தம் காப்பிய உள்ளுறையின் அமைப்பைக் கருதியமையாலும் கம்பர் தம் காப்பியத்துக்கு ‘இராமாவதாரம்’ என்றே வேறு பெயரிட்டார். ஆனால் காலப் போக்கிலே அந்தப் பெயரைப் பின்தள்ளிவிட்டு ‘இராமாயணம்’ என்ற பெயரே மேற்பொலிவுற்றது. வான்மீகத்தினின்று வேறுபடுத்தி உணர்ந்து கொள்வதற்காக “கம்ப ராமாயணம்” எனத் தமிழர் வழங்கலாயினர். ஆசிரியர் இட்ட பெயரை அன்பு பெருகும் ஈடுபாட்டால் ஏற்றம் புலப்படுத்தி மாற்றுவது தமிழ் மரபில் உள்ளதுதானே! சேக்கிழாரின் திருத்தொண்டர்புராணம். பெரியபுராணம் என வழங்குவதை நினைவுகூறலாம். அவதாரக் கருத்து மேலோங்கிய பக்தி இயக்கத்தின் தாக்கத்தால் ‘இராமாவதாரம்’ எனப் பெயரிட்டார் கவிச் சக்கரவர்த்தி. இராமபிரானின் அவதாரக் கதையைச் சொல்வது என்பது இப்பெயரின் விளக்கம். இராமாயணம் என்பது முதல்நூலால் வந்த காரணப் பெயர். இராமன் என்ற வடமொழிச் சொல்லுக்கு எல்லார்க்கும் மனக்களிப்பு அளிப்பவன் என்பது விளக்கம். அயனம் - இடம். இராம+அயனம்: இராம சரிதத்துக்கு இடமாயுள்ள நூல் - இராமாயணம். “ராமனை அடைவதற்கு அல்லது அறிதற்குக் கருவியாயுள்ள நூல்” என்றலும் ஒன்று. ராமனை விஷயமாகவுடைய நூல் என்றாலும் பொருந்தும். ‘ஸ்ரீராமாயணத்தால் சிறையிருந்தவளேற்றஞ் சொல்லுகிறது” என்னும் ஸ்ரீவசநபூஷண வாக்ய பலத்தால். பிராட்டியின் வைபவத்தையுணர்த்தும் நூல் என்றும் கூறலாம். - இது வித்துவான் இராமசாமி நாயுடு அவர்களின் விளக்கம். |