பாரத நாட்டு தொன்மரபுப்படியான புராணம். இதிகாசம் என்ற பகுப்புகளில் இராமாயணம் ஓர் இதிகாசமாகும். இதிகாசம் என்ற சொல் ‘இது முன் இவ்வாறு இருந்தது’ என்னும் பொருள் உடையது. புராணத்துக்கும் இதிகாசத்திற்கும் மிகுந்த வேறுபாடு புலப்படாத அளவுக்கு இரண்டும் ‘பழைய நிகழ்சிகளைக் கூற எழுந்தன’ என்று இன்று சொல்ல வேண்டியுள்ளது. “இதிகாசம் முன்பு மக்கள். தேவர். அரசர் முதலியோருக்கிடையே நடந்த நிகழ்ச்சிகள். கதைகள் முதலியவற்றை உரைப்பதாய் அமைந்திருந்தது” என அறிஞர் விளக்குவர். (கலைக்களைஞ்சியம் : 2 :பக்.559) இதிகாசத்தின் சிறப்பை “இதிகாச கதைகளைக் கொண்டே வேதத்தில் வரும் பல மந்திரங்களுக்குப் பொருள் சொல்லவேண்டியிருக்கிறது. இக்காரணம் பற்றி. இது வேதத்தைச் சார்ந்த பிராமணப் பகுதிகளில் இதிகாச வேதம் என்றே சொல்லப்பட்டிருக்கிறது” என்ற விளக்கத்தால் உணரலாம். தமிழ் இலக்கிய மரபிலே (கம்ப) ராமாயணம் பெருங்காப்பியம் எனக் கொள்ளப்படும். அறம். பொருள். இன்பம். வீடு என்ற நால்வகை உறுதிப் பாருள்களை உரைப்பதாய் இருக்கவேண்டும் என்பது பெருங்காப்பிய இலக்கணத்தில் தலைமையானது. நாற்பொருளில் ஒன்று குறைந்தாலும் பெருங்காப்பியம் என்ற தகுதி நீங்கிவிடும். பெருங்காப்பியத்துக்கு உரிய இயல்களைத் தண்டியலங்காரம் முதலான நூல்களில் கண்டு தெளிக. பொருள் தொடர்நிலைச் செய்யுளாகவும் கொள்ளப்படும். தமிழ் மரபிலே ‘தோல்’ என்றொரு வகை உண்டு. ‘இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினும். தோலென மொழிப தொன்மொழிப் புலவர்’ என்ற தொல்காப்பிய விதிப்படி கம்பராமாயணம் ‘தோல்’ வகையைச் சார்வதாகும். |