உலகம் யாவையும்-எல்லா உலகங்களையும்; தம் உள ஆக்கலும் -தாம் தம் சங்கற்பத்தால் படைத்தலையும்; நிலை பெறுத்தலும் - நிலைத்திருக்குமாறு காப்பதையும்; நீக்கலும்-அழித்தலையும்; நீங்கலா. அலகு இலா விளையாட்டு உரையார் - என்றும் முடிவுறாததும் அளவற்றதுமாகிய விளையாட்டாக உடையவராகிய; அவர் தலைவர் - அவரே தலைவ ராவார்; அன்னவர்க்கே நாங்கள் சரண் - அப்படிப்பட்ட பரமனுக்கே நாங்கள் அடைக்கலம். மங்கலச் சொல்லொடு தொடங்கவேண்டும் என்பது மரபு; அம்மரபின்படி ‘உலகம்’ என்ற மங்கலச் சொல் கவிச்சக்கரவர்த்தியின் வாக்கில் முதலாக எழுகிறது. உலகம் என்பது நிலையியற் பொருள். இயங்கியற் பொருள் (சர. அரசம்) எனவும் உயர்திணை. அஃறிணை எனவும். உயிர்ப்பொருள். உயிரில் பொருள் எனவும் பலவாறு குறிக்கப்படுகின்ற யாவற்றையும் உள்ளடக்கியது. தாம் உள ஆக்கல்: தன்னைப் படைப்பர். பிறர் இல்லாப் பரம்பொருள் தன் சங்கற்பத்தால் படைத்தல். ‘உள ஆக்கல்’; இல்லாததைப் படைத்தல் அன்று; நுண்பொருளைப் பருப் பொருளாக்குதல் என்று கூறுவர். ‘இல்லது தோன்றாது’ என்பது தத்துவம். படைத்தல். காத்தல். அழித்தல் ஆகிய மூவகை அருந்தொழில் பரமனுக்கு மிக மிக எளிது என்பதை ‘விளையாட்டு’ என்ற சொல்லாட்சி குறிக்கிறது. |