என்ற நம்மாழ்வார் திருவாக்கால் (3. 10. 7) உணரலாம். விளையாட்டுடைய பெருமானைப் பெற்றமையால் ஏதும் அல்லல் இல்லை என்பதனால் கவிச் சக்கரவர்த்தி ‘அத்தலைவருக்கே சரண் நாங்களே’ என்கிறார். நீங்கலா அலகிலா என்ற பெயரெச்சங்கள் விளையாட்டு என்ற பெயர்க்கு விளக்க அடைகளாயின. அன்னவர்க்கே ஏகாரம் பிரிநிலை யாயும் தோற்றமாகவும் கொள்ளத்தக்கது. கம்பர் வைணவ சமயத்தர் என்பதை நிறுவுவதற்கு எண்ணற்ற அகச்சான்றுகள் உண்டு. ‘இயங்கு பல்லுயிர்க்கு ஓர் உயிர்’ என நின்ற இராமன் (1818) என்ற தொடரை ஒரு சான்றாகக் கொள்ளலாம். அயோத்தியா காண்டம். சுந்தர காண்டம் ஆகியவற்றின் கடவுள் வாழ்த்துச் செய்யுள்களில் இராம பிரானையே பரம்பொருளாகக் கவிச்சக்கரவர்த்தி காட்டுவது தெளிவு. தமக்குரிய வழிபடு கடவுளாக வெளிப்படைச் சொற்களால் இராமபிரானை / திருமாலை குறிப்பிடத் தயங்காதவர் கம்பர். அவர் காப்பியத் தொடக்கத்தில் பாடும் கடவுள் வாழ்த்தில் பொதுமை பேணுகிறார் என்பதை மனங்கொள்ளல் நலம். வலிந்து பொருள் கொள்வது என உறுதி செய்து கொண்டால் முதல் மூன்று பாடல்களுக்கும் வைணவச் சார்பான உரை வகுத்தல் கூடும். கம்பர் எண்ணியிருந்தால் பொதுமைச் சொல்லால் குறிக்காமல் வெளிப்படையாகவே திருமால் சீர் பாடியிருப்பாரே. ஏன் அவ்வாறு செய்யவில்லை எனச் சான்றோர் சிந்திக்கவேண்டும். கம்பரின் கடவுட் கொள்கை பற்றி மிக விரிவாக ஆராய்வதற்கு இங்கே இடமில்லை; எனினும். பரம்பொருள் பொதுவில் நின்று விளையாடுபவர் என்பதை ஏற்கும் வைணவர் அவர் என்று சுருங்கச் சுட்டி அமைவோம். ‘சரண் நாங்களே’ என்ற தொடர் இராமாயணத்தைச் சரணாகதி சாத்திரம் என்று குறிக்கும் மரபை நினைவூட்டுகிறது. 1 |