பக்கம் எண் :

8பால காண்டம்  

6.

வையம் என்னை இகழவும். மாசு எனக்கு
எய்தவும். இது இயம்புவது யாது எனின்.-
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே.
 

வையம் என்னை இகழவும் - உலகத்துப்   பெரியோர்    என்னை
ஏளனம் செய்யும்படியாகவும்; மாசு எனக்கு எய்தவும்-அந்த    ஏளனம்
காரணமாக  எனக்குக்  குற்றம்  நேரிடும்படியாகவும்;  இது  இயம்புவது
யாது எனின்
-இந்தக் காப்பியத்தைப் பாடுதற்குக் காரணம் யாது   என்று
கேட்டால்; பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்- பொய்ம்மை
இல்லாத   கேள்வியினால்  உண்டாகிய  புலமையாளராகிய   வான்மீகி
முதலானோர்     சொல்லிய; தெய்வ    மாக்    கவி      மாட்சி
தெரிக்கவே
-தெய்வத்   தன்மையால்  பெருமை  கொண்ட   கவிகளின்
பெருமையை உலகிற்கு உணர்த்தலே யாகும்.

வையம்:   உலகம்; இங்குக் கல்வி. கேள்வி. ஞானங்களால்  உயர்ந்த
பெரியோரைக்   குறித்து.    ‘சான்றோரின்’  ஏளனத்துக்கும்   புலமைக்
குற்றத்துக்கும் இலக்காக  நேரிடும் என்பதை உணர்த்தும்.  இக்காப்பியம்
இயற்ற   முனைந்ததற்கும்    போற்றுதலுக்கும்  புலமை   மாண்புக்கும்
இடமான   வான்மீகி   முதலான   சான்றோர்கள்  அருளிய   தெய்வ
மாக்கவிகளின்  பெருமை  புலப்படுத்தும் ஆர்வமே காரணம்  என்கிறார்
கவிச்சக்கரவர்த்தி. கல்வியிற் பெரிய கம்பரின் அடக்கம் இருந்தவாறு!

பொய் இல் கேள்விப் புலமையினோராக வடமொழியில் இராம  கதை
பாடிய   வான்மீகி.  வசிட்டர். போதாயனர் ஆகியோரைச்  சொல்லுவர்.
பொய்  இல்  புலவர் என்ற சிறப்பினைத் திருவள்ளுவர்க்குச்  சேர்ப்பது
தமிழ்   மரபு.   இம்மரபின்படி  குறளாசிரியர்  நெறியினையே   கம்பர்
குறித்துப்   போற்றியதாகக் கம்பனடிப் பொடி கணேசனார்  விளக்குவார்.
அந்தக்   கருத்தை  மையப்படுத்தித்  திரு. மு. இராமசாமி ஓர்  ஆய்வு
நூல் எழுதியுள்ளார்.                                       6
 

7.

துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில். யாழ்
நறை அடுத்த அசுண நன் மாச் செவிப்
பறை அடுத்தது போலும்-என் பாஅரோ. 
 

துறை  அடுத்த- பல்வேறு வகைப்பட்ட;    விருத்தத்   தொகைக்
கவிக்கு
-செய்யுள்  தொகுதியாலாகிய   கவிதைக்கு;   உறை   அடுத்த
செவிகளுக்கு
-இடமாக    உள்ள   செவிகளுக்கு; என்பா   ஓதில்-என்
கவிதைகளை ஓதினால்; யாழ் நறை அடுத்த-யாழிசை யாகிய  தேனைப்
பருகுகின்ற; அசுண நன் மாச்செவிக்கு-அசுணமாகிய நல்ல  விலங்கின்
செவிகளிலே;  பறை  அடுத்தது  போலும்-(கடுமையான)  பறையோசை
வீழ்ந்ததைப் போன்றது.