மடப் பிள்ளைகள்-அறியாமை யுடைய குழந்தைகள்; அறையும் ஆடரங்கும் தறையில் கீறிடின்-அறையும் நாடக மேடையுமாகத் தரையிலே கோடு கீறி விளையாடினால்; தச்சரும் காய்வரோ- சிற்பக் கலை வல்லவர்கள் அக்குழந்தைகளைக் கோபிப்பார்களோ?; (அது போல); இறையும் ஞானம் இலாத என் புன்கவி- சிறிதளவேனும் தெளிவு இல்லாத என் புல்லிய கவியைக் கேட்டு; முறையின் நூல் உணர்ந்தோரும் முனிவரோ-முறையாக நூல்களை ஓதி உணர்ந்த புலவர்கள் சினம் கொள்வாரோ? (குழந்தைகளின் தரைக் கீறல் கண்டு சிற்பிகள் சினவார்; என் புனவி கேட்டுப் புலவர்கள் சினவார்). குச்சி கொண்டு தரையில் கோடுகள் இட்டுத் தம் கற்பனைக் கண்களால் மாட மாளிகைகளைக் காணும் திறம் பேதையராயினும் குழந்தைகளுக்கு உண்டு. துறையடுத்த கவித்திறம் புலமைத்திறம் இல்லெனினும் அன்பெனும் நறவம் மாந்திய பித்தனாகிய கவிஞனுக்குக் கற்பனையில்பல நற்றிறம் தோன்றும். நூலறிவால் பகுத்தறிவைப் பெருக்கியுள்ள புலவோர்க்குக் கவிப்பித்தன் நிலை எட்டாது. ஆயினும். குழந்தையைப் பழிக்காது பாராட்டும் சிற்பி போலப் பத்திமையை மேதைகள் பாராட்டுவர் என்று ‘கவிச்சக்கரவர்த்தி’ எதிர்பார்க்கிறார்போலும்! ‘புன்கவி எனத் தெளிவு இன்றி’(106) என்ற தொடரிலே புன்கவியின் இயல்பு இஃது எனக் கம்பர் புலப்படுத்தியுள்ளார். ‘தரை’ என்ற சொல் எதுகை நோக்கித் ‘தறை’ என மருவி நின்றது. காய்வரோ. முனிவரோ: ஓகாரம் எதிர்மறை. இப்பாடல் எடுத்துக் காட்டுவமையணி கொண்டது. 9 நூல் வரலாறு |