நடையின் நின்று-நல்லொழுக்கத்தில் நின்று; உயர்-உயர்ந்த; நாயகன் - திருமாலின்; தோற்றத்தின் இடை நிகழ்ந்த-அவதாரங்களுக்குஇடையே ஒன்றாக நிகழ்ந்த; இராமாவதாரப் பேர்-இராமாவதாரத்தைக் குறித்தும் புகழ்மிக்கதுமான; தொடை நிரம்பிய தோம் அறு மாக் கதை-செய்யுள்கள் நிறைந்த குற்றமற்ற சிறந்த இந்தக் காப்பியம்; சடையன் - வள்ளல் சடையப்பரது; வெண்ணெய் நல்லூர் வயின்-திருவெண்ணெய்நல்லூரில்; தந்தது-இயற்றப்பட்டது. இராமாவதாரம் என்ற பெயரில் பாடப்பட்ட இக் காப்பியம் தோன்றியகளம் சடையப்பரின் திருவெண்ணெய்நல்லூராகும் என்பது செய்யுளின் செய்தி. நடையின் நின்றுயர் நாயகனாவான் இறைவனாகிய திருமால். தன் இயல்பில் வைகுந்தத்தில் எழுந்தருளியிருக்குங்கால் குணங்குறி கடந்தவனாகிய பிரான். அவதாரமெடுத்து இறங்கி/இரங்கி வரும்போது சாத்துவீக குணமுடையவனாகிறான்; இதனை உணர்த்துவது’நடையில் நின்றுயர் நாயகன் தோற்றம்’ என்ற தொடர். இராமன் என்ற பெயர்கொண்ட அவதாரங்கள் மூன்று; பரசுராமன் பலராமன் ஆகியோருக்கு இடையே நிகழ்ந்த அவதாரம் தசரத ராமாவதாரம். தம்மை ஆதரித்த வள்ளலாகிய சடையப்பரை 394. 8264. 10327 ஆம் பாடல்களிலும் கம்பர் குறிப்பார். 11 |