பக்கம் எண் :

12பால காண்டம்  

பால காண்டம்
 

பால    காண்டம். அயோத்தியா  காண்டம்.  ஆரணிய காண்டம்.
கிட்கிந்தா   காண்டம். சுந்தர  காண்டம்.  யுத்த  காண்டம் என ஆறு
காண்டங்களாகக்  கம்பர்   இராம   காதையைப்     பாடியிருக்கிறார்.
அவற்றுள்  முதலாம்   பிரிவாகிய  பாலகாண்டத்துள்   பெரும்பாலும்
இராமபிரானது பாலப் பருவத்து நிகழ்ச்சிகள் கூறப்படும்.

பெருங்காப்பியங்களில் காண்டம் என்பது ஒரு பகுதியாக அமையும்.
 

1. ஆற்றுப் படலம்
 

ஒவ்வொரு  காண்டமும்  பல  படலங்களை     உட்பிரிவுகளாகக்
கொண்டு விளங்கும்.  பாலகாண்டம்  இருபத்து    மூன்று  படலங்கள்
கொண்டது.

பெருங்காப்பிய    இலக்கணப்படி    ஆறு.      நாடு.    நகரம்
முதலாயின வருணிக்கப்படுதல் இன்றியமையாதது.

ஆற்றுப்படலம் - ஆற்றைப்   பற்றிய   படலம்  என    விரியும்.
இங்குச் சிறப்பித்துப் பேசப்படும் ஆறு சரயு   நதியாகும்.     கோசல
நாட்டுக்கு வளமூட்டும் சரயு நதியின் வெள்ளம். தன்மை.     போக்கு
ஆகியவற்றை இப்படலம் விளக்குகிறது.

                                             மழை வளம்
 

12.

ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்
காசு அலம்பும் முலையவர் கண் எனும்
பூசல் அம்பும். நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்
 

ஆக அலம்புரி -குற்றத்தை  மிகுதியாகச்  செய்கின்ற; ஐம்பொறி
வாளியும்
-  ஐந்து   பொறிகளாகிய  அம்புகளும்;  காசு    அலம்பு
முலையவர்
-   மணியாரங்கள் ஒலிக்கின்ற  மார்பகங்களை   உடைய
பெண்களின்;   கண்   எனும்   பூசல்   அம்பும் -  கண்களாகிய
போர்த்தொழில்   வல்ல  அம்புகளும்;   நெறியின்புறம்   செலாக்
கோசலம் 
-  ஒழுக்க நெறிக்கு அப்பால் செல்லாத கோசல  நாட்டை;
புனை ஆற்று அணி  கூறுவாம்  
-   அழகு   செய்கின்ற   (சரயு)
ஆற்றின்  அழகினைக் கூறுவோம்.