ஐம்பொறிகளும் மாதர் கண்களும் பொதுவாகஒழுக்க நெறிகளை மீறி நடக்கத் தூண்டுவன; கோசல நாட்டின் ஆட்சியிலே செம்மை இருப்பதால் ஐம்பொறி வாளியும் மாதரார் கண்களும் நெறியின் புறம் செல்லாதனவாயின. ’நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே’ (புறநா. 312) என்ற வாக்கு நாட்டவரின் செம்மைக்கு ஆட்சியே காரணம் என அறிவுறுத்துதல் காண்க. இலக்கு நோக்கி விரைந்து பாய்தலின் ஐம்பொறிகளை வாளி (அம்பு) என்றார். ஐம்பொறி வாளி. கண் எனும் அம்பும் இலக்குப் பிழையாது விரைந்து பாயும் இயல்பினது; இதுவும் உருவகமே. மக்களின் நல்லொழுக்கத்துக்கும் தீயவொழுக்கத்துக்கும் அவர் வாழும் நிலத்தின் தன்மை காரணமாகும் என்பர்; கோசலத்தின் நீர்/நிலவளமே அந்நாட்டு மக்களின் ஒழுக்க மேம்பாட்டுக்குக் காரணம் என்பது குறிப்பு. 1 |