மேகம்-மேகங்கள்; பம்பிப் பரந்து-நெருங்கி (இமயமலையில்) படிந்த காட்சி; நம்பன் மாதுலன்-சிவபிரானின் மாமன்; பானுவால்-சூரியனால்; வெம்மையை நண்ணினான்-வெப்பத்தை அடைந்தான்; அம்பின் ஆட்டுதும் என்று-நாம் தண்ணீரால் குளிப்பாட்டுவோம்’ என்று; அகன் குன்றின் மேல் - பரந்த (இமய) மலையின் மேலே; இம்பர்வாரி - இவ்வுலகத்திலுள்ள கடல்; எழுந்தது போன்றது-எழுந்ததைப் போலக் காணப்பட்டது. கடலுக்கு நதிபதி என்றொரு பெயர்; ஆறுகளெல்லாம் கடலில் கலப்பதால் ஆறுகளின் கணவன் கடல் என்பது காவிய வழக்கு. ஆறுகள் மலையில் பிறப்பவை. ஆகையால். கடலுக்கு மலை மாமன் ஆகிறது. மலை மாமனின் வெப்பத்தை ஆற்றுவிக்க மேகங்கொண்டு மழை பொழிகிறதாம் கடல். இப்படியும் விளக்கலாம். மலைமேல் மேகம் படிவது இயற்கை. மேகம் படிவதற்கு ஒரு காரனத்தைக் கவிஞர் குறித்துக் கற்பித்தலால் இது தற்குறிப்பேற்ற அணி. பம்பி: நெருங்கி; ஒலித்து எனப் பொருள் கொள்ளலும் ஒன்று. பானு ஞாயிறு நம்பன்; சிவபிரான். அம்பு: நீர். வாரி; இலக்கணையால் கடலைக் குறித்தது. 3 |