மானம் நேர்ந்தது - மான உணர்வு பொருந்தி; அறம் நோக்கி - தரும நெறி கருதி; மனுநெறி போன - மனுநீதிப்படி நடக்கும் தண்குடை வேந்தன் புகழ் என - குளிர்ந்த குடை நிழலின் கீழ் இருக்கும் மன்னன் புகழ் போலவும்; ஞானம் முன்னிய - ஞான வழியை நாடுகின்ற; நான்மறையாளர் கைத்தானம் என்ன - நான்கு மறைகளிலும் வல்ல வேதியர்களுக்கு வழங்கும் தானம் போலவும்; நீத்தம் தழைத்தது - சரயு ஆற்றில் வெள்ளம் பெருகிற்று. தன் நிலையில் தாழாமையும் தெய்வத்தான் தாழ்வு வந்து உயிர் வாழாமையும் ஆம் என மானத்திற்கு விளக்கம் தந்தார் பரிமேலழகர். மானம் பேணி அறநெறி நோக்கி உயிர்க் குலத்திற்கு நல்லருட் காவல் வழங்கும் மன்னவனின் புகழ் ஓங்கும். வீயாது; தக்கார்க்கு வழங்கிய கொடையின் பயன் ஓங்கும்; வீயாது. ஓயாது இவை போலச் சரயு நதியின் வெள்ளப் பெருக்கு ஓங்கும். வீயாது. ஓயாது எனப்து உவமை விளக்கம். ஓலக்க மண்டபத்துடன் அரியாசனத்தின் மேல் நிழற்றும் குடை நிழலுக்காக ஏற்பட்டதன்று; துன்புறும் உயிர்க்குலத்தின் துயர் துடைக்கும் அருளுக்கு ஓர் அடையாளம். ஆதலின். ‘தண் குடை’ என்றார்; தண்மை ஈண்டு அருளாள்தல். ‘கண்பொர விளங்கும் நின் விண்பொரு வியன்குடை - வெயில் மறைக் கொண்டன்றோ அன்றே. வருந்திய-குடி மறைப் பதுவே’ என்ற வெள்ளைக்குடி நாகனார் வாக்கு கருதுக (புறநா.35). நான்மறையாளர். வெறுமே வேத முழக்கம் செய்வதால் மட்டுமே தக்காராகிவிடமாட்டார் என்பதை ‘ஞானம் முன்னிய’ என்ற முன் ஒட்டு விளக்கி நின்றது. அத்தகு தகுதிப்பாடு உடையாரின் கைப்பட்ட அறத்தின் பயன் நந்தாது நாளும் ஓங்கும்; இதனை. ‘அறப்பயனுன் தான் சிறிதாயினும் தக்கார் கைப் பட்டக்கால் வான்சிறிதா போர்த்துவிடும்’ என விளக்குவர். (நாலடி 38). ‘வேந்தன்’ என இப்பாடலில் தயரதனைக் கவிஞர் குறித்தார் என்பாரும் உளர் 5 விலை மகளிர் : வெள்ளம் |