பக்கம் எண் :

16பால காண்டம்  

அதன்   நிலை நிலாது-(புறத்தளவில் போலியான   விருப்பத்தைக்
காட்டும்)  அவ்வளவோடு அன்றி:  இறை நின்றது  போல- சிறிதளவு
காலமே  விரும்பியிருந்தது   போல;   மலையில்   உள்ள   எலாம்
கொண்டு
- மலையின்  உச்சி.  நடுவிடம். அடிவாரம் ஆகிய  பகுதிகளில்
உள்ள     எல்லாவற்றையும்   வாரிக்கொண்டு   மண்டலால்- விரைந்து
போதலால்;  அவ்  வெள்ளம்-சரயுவில்  பெருகிய  அந்த   வெள்ளம்;
விலையின் மாதரை ஒத்தது
-விலைமகளிரை ஒத்திருந்தது.

சரயு     நதியில் வெள்ளம் விலை மாதரை ஒத்தது என்பது கருத்து.
இக்   கருத்தினைச்   சிலேடையோடு   உவமையணியைச்     சேர்த்து
வழங்குகிறார்.    கவிச்சக்கரவர்த்தி.    ‘விலை    மாதர்     காமுகரது
பொருள்களைக்  கவருமளவும்  அவர்களைத் தழுவிக்     காண்டிருந்து.
கவர்ந்தவாஎறே   விரைவில்  விட்டு  நீங்குதல்  போல.    வெள்ளமும்
மலையில்  உள்ள  பொருள்களை  யெல்லாம் வாரிக்   கொள்ளுமளவும்
மலையைத்  தழுவிக்  கொண்டிருந்தது.  வாரிக் கொண்டவாறே   விட்டு
நீங்கிற்று’ எனச் சிலேடை விளக்கம் தருவர் காஞ்சி இராமசாமி நாயுடு.
இது செம்மொழிச் சிலேடை.

தழீஇ-சொல்லிசை   அளபெடை.    நிலாது.    எலாம்    என்பன
இடைக்குறை.                                              6
 
                                         வணிகர்: வெள்ளம்
 

18.

மணியும் பொன்னும். மயில் தழைப் பீலியும்.
அணியும் ஆனை வெண்கோடும். அகிலும். தன்
இணை இல் ஆரமும். இன்ன கொண்டு ஏகலான்.
வணிக மாக்களை ஒத்தது - அவ் வாரியே.
 

மணியும்    பொன்னும் மயில்தழைப் பீலியும்-முத்துக்கள் பொன்.
மயில்   இறகுகள்;  அணியும்   ஆனை  வெண்கோடும்-அழகுடைய
யானைத்   தந்தங்கள்;  தன்  இணை  இல்  ஆரமும்-தனக்கு  ஒப்பு
இல்லாத    சந்தன   மரம்;   இன்ன   கொண்டு   ஏகலான்-ஆகிய
இத்தகையவற்றை  வாரிச்  செல்லுதலால்;  அவ்வாரி-சரயுவின்   அந்த
வெள்ளம்; வணிக மாக்களை ஒத்தது-வர்த்தகர்களை ஒத்திருந்தது.

தழைப்     பீலி - இருபெயரொட்டுப் பண்புத்   தொகை. ‘மணி’யை
முத்து  எனப்  பொருள்  கொண்டதால்.  ஆரம்    சந்தன மெரமெனப்
பொருள்  கொள்ளப்பட்டது.  ஆரம் - முத்து.   சந்தனம். மாலை எனப்
பல பொருள் கொண்டது.                                    7
 
                                         வானவில்: வெள்ளம்
 

19.

பூ நிரைத்தும். மென் தாது பொருந்தியும்.
தேன் அளாவியும். செம் பொன் விராவியும்.
அனை மா மத ஆற்றொடு அளாவியும்.
வான வில்லை நிகர்த்தது - அவ் வாரியே.