இரவிதன் குலத்து -சூரிய குலத்தில் தோன்றிய; எண்ணில் வேந்தர்தம்-எண்ணற்ற பல வேந்தர்களின்; பரவு நல் ஒழுக்கின்படி-போற்றத் தகுந்த நல்லொழுக்கத்தின் தன்மையை; பூண்டது- மேற்கொண்டதாகிய; சரயு என்பது- சரயு என்னும் பெயருடைய அந்த ஆறு; இவ் உரவுநீர் உலகத்து- உயிரினங்கள் யாவற்றுக்கும்; தாய் முலை அன்னது- பாலூட்டிப் பேணும் தாயின் மார்பகம் போன்றது. இரவி குலத்திலே தோன்றிய வேந்தர்கள் எண்ணற்றவர்கள்; அத்துணைப் பேரும் உலகவர் போற்றும் ஒழுக்க நலம் வாய்ந்தவர்கள். வேந்தர்களின் ஆட்சியிலே ஒழுக்கம் எவ்வாறு இடையறாது அமைந்ததோ; அவ்வாறே சரயு நதியின் நீரோட்டமும் இடையறாதாய் அமைந்தது. நினைந்து ஊட்டும் தாய் போல உயிர்க் குலத்தின் தேவை அறிந்து நீர் வழங்குவது சரயு என்பது கருத்து. தாய்ப் பாலுக்கு அமுதம் (அமிர்தம்) என்ற பெயர் வழங்குவதை இவண் நினைவு கூர்க. கம்பரின் இப்படிமத்துக்கு மூலம் ‘புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச் சுரந்த காவிரி’ (புறநா. 68) என்னும் தொடராகக் கருதலாம். சோழநாட்டை வளர்க்கும் தாயாகக் கொண்டு. காவிரியை ‘வாழி அவன்தன் வளநாடு வளர்க்கும் தாயாகி’ (சிலப் 7:27) என இளங்கோவடிகள் குறித்தது இங்கு நினைவு கூரத்தக்கது. |