முல்லையைக் குறிஞ்சி ஆக்கி- முல்லை நிலத்தை குறிஞ்சி நிலமாக்கியும்; மருதத்தை முல்லை ஆக்கி- மருத நிலத்தை முல்லை நிலமாகச் செய்தும்; புல்லிய நெய்தல் தன்னை- புன்புலமாகிய நெய்தல் நிலத்தை; பொரு அரு மருதம் ஆக்கி- நிகரில்லாத மருத நிலமாகச் செய்தும்; எல்லை இல் பொருள்கள் எல்லாம்- (பல்வேறு நிலங்களின்) அளவற்ற பண்டங்களை யெல்லாம்; இடை தடுமாறும் நீரால்- தத்தம் இடத்தை விட்டு வேறு நிலத்துக்குக் கொண்டு செல்லும் தன்மையால்; செல்லுறு கதியில் செல்லும்-செலுத்தப்படுகின்ற போக்கிலே இழுத்துப் போகின்ற; வினை எனச் சென்றது- இரு வினைகள் போல (அந்த வெள்ளம்) சென்றது. ஒரு நிலத்தை வேறு நிலத்தின் இயல்புடையதாகச் செய்யவல்லது வெள்ளம்; அதுபோலவே. தேவர்களை மனிதர்களாக்கியும் மனிதரைத் தேவராக்கியும் இவ்வாறே நான்கு கதிப் பிறவிகளையும் நிலை தடுமறச் செய்யவல்லது வினையின் போக்கு. உயிர்களை இங்குமங்குமாக ஏற்றி இறக்கும் விதியின் தன்மையைக் கங்கை காண் படலத்தில் ‘........நாவாய்.......’ அமரர் வையத்து இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும் இருவினை என்னல் ஆன’ (2348) எனக் கம்பர் குறிப்பிடுவார். ஆற்றின் வெள்ளப் போக்கிலேயே பொருள்கள் போகும்; (கதி-போக்கு) எதிர்த்துச் செல்லா. வினைப் பயன் இழுக்கும் போக்கிலேயே பல்வேறு உயிர்கள் போகும். இக்கருத்து மூலம் புறநானூற்றுப் பூங்குன்றனார் பாடல். |