கல்லிடைப் பிறந்த போந்து- இமய மலையில் தோன்றி அங்கிருந்து வந்து; கடலிடைக் கலந்த நீத்தம்-கடலிலே கலந்துவிட்ட சரயுவின் வெள்ளமானது; ‘எல்லை இல் மறைகளாலும்- அளவிட முடியாத வேதங்களாலும்; இயம்ப அரும் பொருள் ஈது’ என்ன- சொல்லுதற்கரிய பரம்பொருள் (போன்றது) இவ்வெள்ளம்’ என்று கூறுவதற்கு ஏற்றபடி; தொல்லையில் ஒன்றே ஆகி- ஆதிமுதலில் ஒன்றாகவே இருந்து; துறைதொறும்- ஏரி குளம் முதலிய வேவ்வேறு இடங்களிலெல்லாம்; பரந்த- விரிந்த; சூழ்ச்சிப் பல்பெருஞ் சமயம்- ஆராய்ச்சியுடைய பல்வேறு சமயவாதிகள்; சொல்லும் பொருள்போல்- விளக்கி உரைக்கின்ற பரம்பொருள் போல; பரந்தது- பரவியது. பரம்பொருள் ஒன்று; அதுபோல வெள்ளநீரும் ஒன்றே. பல்வேறு சமய. தத்துவங்களின் கருத்துக்கு ஏற்பப் பரம்பொருளும் வெவ்வேறு நாம. ரூப பேதங்களாக விளகங்குகிறது; அதுபோலவே வெள்ளநீரும் ஏரி. குளம். கால்வாய் போன்ற பல இடங்களில் பல பெயர்களால் பரந்து செல்கிறது. கல்: (இமய மலை; இமயத்தை ‘வடபெருங்கல்’ என்று குறுங்கோழியூர் கிழார் (புறநா.17) குறிப்பர். மதுரைக் காஞ்சி (70)யிலும் இவ்வாட்சி காணலாம். |