அன்பு என்னும் மதுவைப் பருகி; மூங்கையான் பேசலுற்றான் என்ன- ஊமையே பேசத் தொடங்கிவிட்டான் என்றாற் போல; யான் மொழிய லுற்றேன்- நான் பேசலானேன்.வான்மீகி பாடிய சுலோகத்தில் எந்த வரியையும் எடுத்துவிட முடியாது என்பார் வாங்க அரும் பாதம் என்றார்; அத்துணைச் செறிவு மிக்கது வான்மீகியின் வாக்கு என்பது. பாதம்: (இங்கே) பாட்டின் அடிகள். வான்மீகிக்கு முன்னர் நான்கு அடி கொண்ட சுலோகம் இல்லை யாதலின் அவ்வாறு முதலில் கவி செய்தமையால் அவர் ஆதிகவி எனப்பட்டார் என்பர். என்பான்: எனப்பட்டவன்; செயப்பாட்டு வினை. தேவரும்-உயர்வு சிறப்பும்மை. ‘பருக’ என்ற சொல்லாட்சிக்கு ஏற்பகச் ‘செவி வாயாக’ எனவும் தேவர்கள் பருகியதாகக் கவி கூறியதற்கு ஏற்பக் கவியமுதம் எனவும் உருவகப்படுத்தி உரை கூறப்பட்டது. வான்மீகத்தின் பயன் கூறுமிடத்துத் தேவரும் கேட்டு மகிழ்ந்ததாகக் குறிக்கப்பட்டிருப்பதாகக் கூறுவர். ஆதிகவியை நினைந்தபோது கம்பருக்கு அடக்க உணர்வு முகிழ்த்ததை இப்பாடல் உணர்த்துகிறது. அன்பெனும் நறவம்-உருவகம். கள் உண்டவன் சொல்போலப் போதை நிறைந்த கவிச் சொல் பிறந்ததை நாம் உணரலாம். கள்ளுக்குச் ‘சொல்விளம்பி’ என்று ஒரு பெயருண்டு. கவிஞரா பேசுகிறார்? இல்லை. உள்ளேயுள்ள அன்பெனும் நறவம் பேசுகிறது! கோசல நாட்டு வளம் இப்பாடலில் பொதுவாக. பேசப்பட்டது; இனி. விளக்கமாகப் பேசும். அடுத்த பாடல். 1 |