மா மருத வேலி- பெருமைக்குரிய (கோசல நாட்டின்) மருத நிலத்து எல்லைக்குள்; ஆறு பாய் அரவம்- ஆற்று நீர் பாய்வதால் எழும் ஓசையும்; மள்ளர் ஆலை பாய் அமலை- உழவர்கள் ஆலையாடுதலால் உண்டாகும் ஓசையும்; ஆலைச் சாறு பாய் ஓசை- அக் கரும்பாலைகளில் கருப்பஞ்சாறு பாய்வதால் எழுகின்ற ஓசையும்; வேலைச் சங்கின் வாய்ப் பொங்கும் ஓசை- நீர்க் கரைகளில் உள்ள சங்குகளிடமிருந்து பெருகும் ஓசையும்; ஏறுபாய் தமரம்- எருதுகள் தம்முள் மோதிப் பாயும்போது எழும் ஓசையும்; நீரில் எருமை பாய் துழனி- நீர்நிலைகளில் எருமைகள் பாய்வதால் உண்டாகும் ஓசையும்; இன்ன- ஆகிய இத்தகைய ஓசைகள்; மாறு மாறு ஆகி- வெவ்வேறாக அமைந்தனவாகி; தம்மில் மயங்கும்- தமக்குள் ஒன்றோடொன்று கலந்து ஒலிக்கும். ஓரிடத்து எழும் ஓசை கொண்டு அவ்விடத்தின் இயல்பினை அறியலாகும். சங்கு கடலுக்கு உரியது; புதுவெள்ளப் பெருக்கில் எதிரேறி மருத நிலத்து வந்தது. தனித்தனியே பிறக்கும் ஓசைகள் பரவும்போது கலந்து ஒலிப்பதை ‘மாறு மாறு ஆகித் தம்மில் மயங்கும்’ என விளக்கினார். அரவம். அமலை. ஓதை. ஓசை. தமரம். துழனி; இவை ஒரு பொருட் சொற்கள். பொருட் பின்வருநிலையணி. 3 |