தண்டலை மயில்கள் ஆட- சோலைகளிலே மயில்கள் ஆடவும்; தாமரை விளக்கம் தாங்க- தாமரை மலர்கள் விளக்குகளை ஏந்தி நிற்கவும்; கொண்டல்கள் முழவின் ஏங்க- மேகங்கள் மத்தளம் போல ஒலிக்கவும்; குவளை கண் விழித்து நோக்க- குவளைக் கொடிகளில் மலர்கள் கண்போல் விழித்துப் பார்க்கவும்; தெண் திரை எழினி காட்ட- நீர்நிலைகளின் அலைகள் திரைச்சீலை போலக் காட்டவும்; தேம் பிழி மகர யாழின்- தேனை ஒத்த மகர யாழ் இசை போல; வண்டுகள் இனிது பாட- வண்டுகள் இனிமையாகப் பாடவும்; (இவ்வாறு இசையும் கூத்தும் பொலிகின்ற அரங்கிலே)- மருதம் வீற்றிருக்கும்- மருத நாயகி வீறு தோன்ற அமர்ந்திருப்பது போன்றிருந்தது. உரையாசிரியர்கள் பிறரெல்லாம் மருத வேந்தன் என்றனர்; அது பொருத்தமே. எனினும். இயற்கையை அன்னை எனப் போற்றும் மரபினை ஓம்பி இங்கே மருதம் நாயகியாக உரைக்கப்பட்டது.”.......எதிரே கொலு வீற்றிருக்கும் அரசி மருதாயி நாச்சி இக்காட்சியைக் கண்டு களிக்கிறாள்” என்பர் பேரா. அ. ச. ஞா. (கம்பன் கலை - பக்.4). “இந்த இடத்தில் கவிஞன் கையாளும் உவமை. இயல்புக்கும் மரபுக்கும் ஒத்துக் கற்போர்க்கு இன்பம் பயப்பதாகும். கொண்டல் முழங்கின் மயில் ஆடும்; குவளை மலர்ந்திருக்கும் மாலைப் போதில் தாமரை குவிந்துவிடும். இந்த இயல்பு பிறழாமல் முறைப்படுத்தும் கவிஞன் திறன் துய்ப்பார்க்குச் சுவை ஊட்டுமன்றோ?” (பக்.5) தண்டலை; சோலை. குளிர்ந்த இடம் (தண் + தலை) என்ற பொருள் உடையதாய்ப் பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. குவளைக் கண் என்பது எதுகை நோக்கிக் குவளை கண் என நின்றதாகக் கொண்டு பொருள் கூறுதலும் உண்டு. யாழ்: யாழிசைக்கு ஆகுபெயர். 4 |