சங்கம் நீரிடை உறங்கும்- சங்குகள் தண்ணீரில் உறங்கிக்கொண்டிருக்கும்; மேதி நிழலிடை உறங்கும்- எருமைகள் மர நிழலில் உறங்கிக் கொண்டிருக்கும்; வண்டு தாரிடை உறங்கும்- வண்டுகள் மலர் மாலைகளிலே உறங்கிக்கொண்டிருக்கும்; செய்யாள் தாமரை உறங்கும்- திருமகள் (பெயர்தலின்றித்) தாமரை மலரிலே உறங்குவாள்; ஆமை தூறிடை உறங்கும்- ஆமைகள் சேற்றிலே உறங்கும்; இப்பி துறையிடை உறங்கும்; முத்துச் சிப்பிகள் நீர்த் துறைகளிலே உறங்கும்; அன்னம் போரிடடை உறங்கும்- அன்னங்கள் நெற்போரிலே உறங்கிக் கிடக்கும்; தோகை பொழிலிடை உறங்கும்- மயில்கள் சோலைகளிலே உறங்கிக் கொண்டிருக்கும். பிறர் இடையியீடின்றி நிம்மதியாக யாவும் தூங்குகின்றன. கவலை யின்றி. அச்சமின்றி. நிலை மாற்றமின்றித் தூங்குகின்றன. மலர் மாலை அணிந்தோர் நடமாடிக் கொண்டிருந்தாலும் அம் மாலைகளிலே வண்டுகள் உறங்குகின்றனவாம்; பலர் ஊடாடும் நீர்த் துறைகளிலே முத்துச் சிப்பிகள் உறங்குகின்றன - இவையெல்லாம் எவ்வகை இடையீடும் இல்லாமல் பெறுகின்ற நிம்மதியையும் அச்சமின்மையையும் குறித்தன. முன்பாட்டில் ‘வண்டும் திருமகளும் தாமரைப் படுவ’ என்றார்; தேன் நாடி. உண்டபின் வேறு இடம் நாடும் வண்டோடு திருவையும் இணைத்துச் சொன்னார். ஒரு கால் செல்வத்தின் பொதுத்தன்மை நோக்கி அவ்வாறு கம்பர் கூறியிருக்கலாம். கோசல நாடடில் திருமகள் நிரந்தரமாக; இடம் பெயர்தலின்றி செல்வம் தவறான வழியிலே பாயுமோ என்ற அச்சமின்றித் தூங்குகிறாள். ‘திரு வீற்றிருந்த தீது தீர் நியமம்’ என்று நக்கீரர் வருணித்த மாமதுரைக் கடைவீதி இங்கு நினைவில் எழும். |