தெள்விளிச் சிறியாழ்ப்பாணர்- தெளிந்த இசை கொண்ட சிறிய யாழையுடைய பாணர்கள்; தேம்பிழி நறவம் மாந்தி- இனிமையாய் வடிக்கப்பட்ட மதுவினைக் குடித்து; வள் விசிக் கருவி பம்ப- வாரால் இழுத்துக் கட்டப்பட்ட முழவுகள் ஒலிக்க; வயின் வயின் வழங்கு பாடல்- ஆங்காங்கே பாடப்படுகின்ற பாடல்கள்; வெள்ளி வென் மாடத்து உம்பர்- வெள்ளை வெளேரென ஒளிவீசும் மாடங்களின் மேல்; வெயில் விரி பசும்பொன் பள்ளி- ஒளி உமிழும் பசும்பொன்னாலன கட்டிலிலே (உறங்குகின்ற); எள்ள அருங்கருங்கண் தோகை- பழிப்பதற்கு அரிய கருமை நிறக் கண்களையுடைய மயில்போலும் மகளிரை; இன்துயில் எழுப்பும்- இனிய உறக்கத்தி லிருந்து எழுப்பும். ‘வயின் வயின் வழங்கு பாடல் துயில் எழுப்பும்’ என வினை முடிபு கொள்க. பாணர்கள் பாடும் இசையால் துயில் நீங்குமளவு மென்மையும் வளமையும் உடையவராகச் செல்வ மங்கையர் கோசலத்தில் வாழ்ந்தனர். எள்ள அரும் என்பது யாப்பியல் வடிவில் அகரம் தொக்கு எள்ளரும் என நிற்கும். 8 |