கருங்கடல் தரங்கம்- கரிய நிறத்தை உடைய கடலின் அலைகள்; புதுப்புனல் குடையும் மாதர்- ஆற்றில் புதுவெள்ளத்தில் நீராடும் மகளிரின்; பூவொடு நாவி பூத்த கதுப்பு- மலர்களும் கஸ்தூரிக் கலவையும் கமழ்கின்ற கூந்தலின்; உறு வெளியே நாறும்- மிகுந்த மணமே கமழும் (என்றால்) மைந்தர் விதுப்பு உற- ஆண்கள் விருப்பம் கொள்ள; வாள் கடைக் கண்ணின் நோக்கும்-வாள் போன்ற கடைக் கண்களால் (காதல் எழப்) பார்க்கின்ற; மதுப் பொதி மழலைச் செவ்வாய்- தேன் போன்ற குதலை மொழி பேசும் சிவந்த வாயைக் கொண்ட; அன்னார் மிகுதியை விளம்பல் ஆமோ- அந்தப் பெண்களின் எண்ணிக்கை மிகுதியைக் கூற இயலுமோ? (பெண்கள் எண்ணிக்கை மிகுதியாதலின் கூற இயலாது) கடல் ஆகிய பெருநீர்ப் பரப்பு சேர்ந்த ஆற்று நீர்ப் பெருக்கால் மலர் மணமும் கத்தூரி மணமுமே மணக்க வேண்டுமெனின் எண்ணில்லாத மகளிர் ஆற்றில் நீராடியிருக்கவேண்டும். இவ்வாறு உய்த்துணர வைத்தலால் இதனை அனுமான அணி என்பர். |