எருமை நாகு ஈன்ற- பென் எருமைகள் பெற்ற; செங்கண் ஏற்றையோடு ஏற்றை- சிவந்த கண்களை உடைய கடாவோடு மற்றொரு கடா; ‘சீற்றத்து உரும் இவை’ என்னத் தாக்கி- ‘கோபம் கொண்ட இடிகள் இவை’ என்று சொல்லும்படியாக மோதி; ஊழுற நெருக்கி- முறையாக நெருங்கி; ஒன்றாய் வீரி இருள்- எங்கணும் ஒரே பொருளாய் விரிந்திருக்கின்ற இருட்பிழம்பு; இரண்டு கூறாய்- இரண்டு பகுதிகளாகப் பிரிந்து நின்று; வெகுண்டன- ஒன்றோடு ஒன்று கோபம் கொண்டு பொருதன; அதனை நோக்கி- அந்தப் போரைக் கண்டு; குஞ்சி அரி இனம் ஆர்ப்ப- தலை முடியில் அணிந்த மலர்களில் இருந்த வண்டுகளின் கூட்டம் (கலைந்து) ஆரவாரம் செய்யும்படியாக; மஞ்சு உற ஆர்க்கின்றாரும்- தமது குரல் மேகமண்டலம் வரை செல்லும்படி ஆரவாரம் செய்பவர்களும்.... எங்கும் பரவியுள்ள ஒரே பிழம்பு இரண்டு கூறாகப் பிரிந்து தம்முள் மோதுவது போல எருமைக் கடாக்கள் காணப்படுகின்றன. ஒரே நிறம். ஒரே தரம்; உருவம் மட்டுமே இரண்டு. அவை மோதிப் பொருவதைப் பார்த்து வீரர்கள் மகிழ்ந்து ஆர்ப்பரிக்கின்றனர். எருமையில் பெண் நாகு என வழங்கும். ‘எருமையும் மரையும் பெற்றமும் நாகே’ (தொல் பொருள். மரபு 63). எருமை நாகு; இருபெயரொட்டுப் பண்புத் தொகை. ஈற்றை என்பதில் ஐகாரம் சாரியை. 17 |