பக்கம் எண் :

  நாட்டுப் படலம்61

மூக்கில் தாக்குறும் மூரி நந்தும்- மூக்கில் வாய்வைத்து ஊதப்படும்
வலிய   சங்கு   வாத்தியத்தின்   ஒலியும்;  நேர்தாக்கின்  தாக்குறும்
பறையும்
-  நேரான    குறுந்தடியால் தாக்கப்படும் பறையினது ஓசையும்;
வீக்கில் தாக்குறும்  தண்ணுமை  விளியும்
-  வாரால்  பிணிக்கப்பட்ட
மத்தள முழக்கமும்; மள்ளர்தம் வாக்கில் தாக்குறும் ஒலியில் மாயும்-
உழவர்கள் உழவு மாடுகளை அதட்டும் ஒலிக்குள்ளே அடங்கிவிடும். 

சங்கு.     பறை.  மத்தளம்     இவைகளின்     ஓசை  உழவர்கள்
ஆரவாரத்திலே   அடங்கிவிடும்    என்பதால்  உழவர்களது  ஆரவார
ஒலியே  ஓங்கி  நிற்கும்  என்பது    கருத்து.  மூக்கு  என்றது சங்கின்
கரிமுகத்து  நுனியை.  ஒன்றில்   மற்றொன்று அடங்கும் என்பதால் இது
மறைவணியாகும்.   56.  57  இரு    பாடல்களிலும்  விழாச்  சிறப்பும்.
வேள்விச் சிறப்பும் கூறினார்.                                 57

                                   சேய்க்கு ஊட்டும் செங்கை
 

89.தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப்
பாலின் ஊட்டுவார் செங் கை. பங்கயம்
வாய் நிலா உறக் குவிவ மானுமே.

 

தாலி  ஐம்படை   தழுவு   மார்பிடை  -   ஐம்படைத்   தாலி
அணிந்திருக்கும் மார்பிலே;  மாலை வாய் அமுது ஒழுகும் மக்களை-
சீராக.  வாயிலிருந்து  ‘சொள்ளு’  ஒழுகும்  குழந்தைகளுக்கு;  பாலின்
ஊட்டுவார்  செங்கை
-  பாலமுதைப்  புகட்டும்  பெண்களின் அழகிய
கைகள்; பங்கயம் வாய் நிலாவுறுக் குவிவ மானுமே.-தாமரை மலர்கள்.
நிலவு எழுதலால் குவிவதை ஒத்திருக்கும்.

ஐம்படைத்    தாலி அணி செய்யும் மார்பிலே சொள்ளு நீர் வழியும்
தம்    குழந்தைகளுக்குத்    தாய்மார்கள்   பால்     கலந்த   சோறு
ஊட்டுகிறார்கள். அப்போது குவிந்திருக்கும் அவர்களின்   கைகள் நிலா
எழுந்ததால் குவிந்த தாமரை மலர்களை ஒத்திருக்கும்   என்பது கருத்து.
ஐம்படை: திருமாலின் ஐந்து படைகள். காக்கும்   தெய்வமான திருமால்.
தம்  குழந்தைகளுக்கு  நோய்  முதலியன வராது   காக்கவேண்டுமென-
இந்த   ஐம்படைத்தாலியைக்   குழந்தைகளுக்கு     அணிவிப்பதுண்டு.
ஐம்படை: சங்கு. சக்கரம். கதை. வில். வாள்.

‘மழலை  சிந்துபு  சின்னீர் ஐம்படை நனைப்ப’ என்பது மணிமேகலை
(மணி 3: 138. 7:56). பால்: பாற்சோற்றுக்கு இலக்கணை.           58

                                  ஒழுக்கத்தின் விளைவு. அறம்
 

90.பொற்பின் நின்றன. பொலிவு; பொய் இலா
நிற்பின். நின்றன. நீதி மாதரார்
அற்பின் நின்றன. அறங்கள்; அன்னவர்
கற்பின் நின்றன. கால மாரியே.