பொற்பின் நின்றன பொலிவு - (அந்த நாட்டு மக்களின்) அகத்தழகால் நிலைத்திருந்தது புறத்தழகு; பொய்யிலா நிற்பின் நின்றன நீதி- அவர்களது பொய்ம்மை இல்லாத மெய்ந்நிலையால் நீதி நிலைத்து நின்றது; மாதரார் அற்பின் நின்றன அறங்கள்- (அந்த நாட்டுப்) பெண்களின் அன்பால் அறங்கள் நிலைபெற்றிருந்தன; அன்னவர் கற்பின் நின்றன காலமாரியே-அப்பெண்களது கற்பினால் பருவமழை நிலைத்திருந்தது. அந்நாட்டு மக்கள் அழகெனக் கருதுவது நற்குணத்தினையே என்பதால் ‘பொற்பின் நின்றன பொலிவு’ என்றார். பொய்யிலா நிற்பு: மெய்ந்நெறி நிற்றல் அன்பு: “அறத்திற்கே அன்பு சார்பென்ப” என்ற குறளுக்கேற்ப “அற்பின் நின்றன அறங்கள்” என்றார். கற்புடைப் பெண்களுக்குக் கடவுளரும் பணி புரிவர் என்பதால் ‘கற்பின் நின்றன காலமாரி’ என்றார். இப்பாடலை முதல் இரண்டு அடிகள் (அருமழை வேண்டினும் தருகிற்கும் தன்மையன் (கலி) ஆண்களைப் பற்றியது எனவும் கடைசி இரண்டடிகள் பெண்களைப் பற்றியது எனவும் கூறுவர். முழுவதும் பெண்களைப் பற்றியதே என்று கூறுவதும் பொருந்தும். 59 |