‘மாண்டு பிறக்கும் துயர் போய் வைகுந்தம் புக்கவரும் மீண்டும் தொழக் காதலிக்கும் வேங்கடமே’ என்ற திருவேங்கடமாலைச் செய்யுளில் இப் பாடலின் கருத்தைப் பிள்ளைப் பெருமாளையங்கார் அமைத்திருப்பது கருதத்தக்கது. (திருவேங்கடமாலை 10) தொல்காப்பியப் புறத்திணையியல் (தொல்-பொருள் புறத். 21) நூற்பாவில் சுட்டப்படும் ‘கட்டில் நீத்த பால்’ என்ற துறைக்குப் பரதன் அரியாசனம் துறந்த செய்தி கொண்ட பாடல் எடுத்துக்காட்டப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் வரும் இராமகாதைச் செய்திகள் யாவரும் அறிந்தன. கம்பரை யன்றி அயோத்தியைப் புகழ்ந்த தமிழ்ப் புலவர் பிறர் கம்பருக்கு முன்னர் வாழ்ந்தனரோ என்ற தடை எழுதற்கு இடம் உண்டு. அத் தடைக்கு விடை வருமாறு: கம்பர் காலத்துக்கு நெடுங்கால முன்பே தமிழர்க்கு இராம கதை அறிமுகமானதுதான். ஊன்பொதி பசுங்குடையார் பாடிய பாடாண் திணைப்பாடல் ஒன்றில் கிட்கிந்தா காண்ட நிகழ்ச்சி ஒன்று காணப்படுகின்றது. இராவணனால் சிறை எடுத்துச் செல்லப்பட்டபோது சீதை கழற்றி எறிந்த அணிகலன்களின் நிலை அறியாத வானரங்கள் முறை மாற்றி அவற்றை அணிந்து பார்த்ததாக அச் செய்யுள் தெரிவிக்கின்றது. (புறநானூறு 378). தென்கோடி (தனிக்கோடி) யில் அணை அமைத்துக் கடல் கடந்து செல்லுமுன் ஆல மரம் ஒன்றின்கீழ் அமர்ந்து இராமன் தன்னவரோடு நிகழ்த்திய மந்தணப் பேரவை பற்றி மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார் குறிப்பிடுகிறார். (அகநானூறு 70). இப்படி உதிரி நிகழ்ச்சிகளே யன்றி இராமன் கதையை முழுமையாகப் பாடிய நூல்களும் இருந்திருக்கவேண்டும் என்ற குறிப்பும் கிடைக்கிறது. ‘கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம்’ (தொல். புறத். 12) என்ற துறைக்கு விளக்கம் எழுதும்பொது. ‘இராமன் இலங்கை கொள்வதன்முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது’ என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார் கம்பர் காலத்துப் பழைய தமிழ் இராமாயண நூல்கள் வழக்கில் இருந்து. அவற்றை அவர் பயின்றிருக்கவேண்டும். அந் நூல்களில் தமிழ்க் கவிஞர்கள் அயோத்தியின் சிறப்பைப் பாடியதை அறிந்தே கம்பர் ‘கவிஞர் புகழ்ந்தது’ என்று நகரப் படலத்துள் குறித்திருப்பார். ஆழ்வார்கள் அருளிச் செயல்களில் கம்பருக்குப் பெரிதும் ஈடுபாடு உண்டு என்பது யாவர்க்கும் ஏற்புடைய கருத்து. ஆழ்வார்கள் வாக்கில் பதின்மூன்று இடங்களில் அயோத்தி குறிக்கப்படுகிறது. (பெரியாழ்வார் 32. 34. 316. 321. 325. 399; குலசேகராழ்வார் 724. 725. 741. 748. தொண்டரடிப் பொடியாழ்வார் 920; திருமங்கையாழ்வார் 1875 நம்மாழ்வார் 2788). இவற்றுள். எட்டு இடங்கள் அயோத்தியைப் பெயரளவில் குறிக்கின்றன. ஏனைய ஐந்தும் சுருக்கமான விளக்கம் தந்து அயோத்தியை ஒருவாறு சிறப்பிக்கின்றன. தேர் அணிந்த அயோத்தி (321). அங்கண் நெடுமதிள் புடைசூழ் அயோத்தி என்னும் நகரம் (741). அம்பொன் நெடுமணிமாட அயோத்தி (748). தவளமாடம் நீடு அயோத்தி (1875). நற்பால் அயோத்தி (2788). அருளிச் செயல்களில் அயோத்தி பற்றிய குறிப்புகள் இவ்வளவே. மறைந்து போன-கம்பர் கண்டிருக்கக் கூடிய-தமிழ் இராமாயணங்களில் விரிவான வருணனை இருந்திருக்க வேண்டும். வடமொழியில் கம்பர் குறித்த மூவர் இராமாயணங்களில் வான்மீகம் ஒன்றே கிடைப்பது. அதில் அயோத்தி வருணனை உண்டு. “அந்த நாட்டின் (கோசலம்) தலைநகரம் அயோத்தி. மனு என்னும் புகழ்பெற்ற சூரியகுல அரசனால் நிர்மாணிக்கப்பட்ட நகரம். மிக்க அழகும் புகழும் பெற்ற நகரம். |