பக்கம் எண் :

  நகரப் படலம்67

வால்மீகி     வருணித்திருப்பதைப் படித்தால். தற்கால    ராஜதானி
நகரங்களுக்கு    எந்த    விதத்திலும்   அயோத்தி     குறைந்ததாகத்
தோன்றவில்லை”  என்ற  கணிப்பு வான்மீகர் புகழ்ந்த   அயோத்தியை
விளக்கப்   போதுமானது.   (சக்கரவர்த்தி     இராசகோபாலாச்சாரியார்:
இராமாயணம்  பக்.  18) அயோத்தி என்றசொல்  போரால் (யுத்தத்தால்)
பற்றமுடியாதது   என்னும்   பொருள்   உடையது.   மதுரை  நகரத்து
வாயிலைப் போருவாயில் என நக்கீரனார் குறிப்பது ஒப்பிடத்தக்கது.

நல்ல     கவிதைக்கு   உரிய   இயல்புகளை விளக்கும் இலக்கியக்
கொள்கையைத்     துலக்குவதற்கும்       இலக்கியத்     திறனாய்வு
மேற்கொள்ளுதற்கும்  தமிழ்க்  கவிஞர்    இயல்பினை  விளக்கும்  இச்
செய்யுளின் முதற்பகுதி ஒரு கட்டளைக்   கல்லாக அமைகிறது எனலாம்.
செம்மை வடிவு. இனிய ஓசை. விழுமிய   நுவல் பொருட் சீர்மை: இவை
நற்கவிதைக்கும்  பெருங்கவிதைக்கும்     இன்றியமையாதன. செப்பமான
சொல்லும்  இனிய ஓசையும் பயன்கொண்டு   நிரப்புவது நற்பொருளிலே
தான்.  கொச்சையும்  சிதைவும் இல்லா   நுட்பமான கூர்மை. விளையும்
பயனால்  இனிமை.  இவை  கவிதைச்   சொற்களின் கட்டுக்கோப்பைப்
புலப்படுத்துவன.  செவ்விய.  மதுரம்    சேர்ந்த.  நற்பொருளின் சீரிய.
கூரிய:  என்ற  வினையாலணையும்    பெயர்கள் இங்கே திட்ப நுட்பம்
சிறந்தனவாய்   இலக்கிய   இயல்     புலப்படுத்தும்   சூத்திரங்களாய்
பொலிகின்றன.  சொல்லுக்கு  விளக்கம்    தருவாராய்க்  கவிதை இயல்
தெளிவுபடுத்தினார். கவிச்சக்கரவர்த்தி.

நல்ல   சொல் கருத்தில் தலைகாட்டும் போதே கவிஞரின் உணர்வும்
கலைத்தூண்டிலால்  விரைந்து  பற்றுவதை    ‘வவ்விய  கவிஞர்’ என்ற
தொடர் புலப்படுத்துகிறது.

அவ்     உலகம்: இதில் அகரம் சேய்மைச் சுட்டு. எட்டாத ஒன்றோ
என்று  கவலைப்படுமளவுக்குத்     தொலைவான இலட்சியம் என்பதைச்
சேய்மைச்   சுட்டு  விளக்குகிறது.     இதன்  நுட்பத்தைக்  காஞ்சிபுரம்
இராமசாமி  நாயுடு  பின்வருமாறு    விளக்குகிறார்:  “அவ்வுலகம் எனச்
சேய்மைச் சுட்டாற் கூறினமையால்.    தவஞ்செய்யாதார் ஏற ஆதரித்தல்
கூடாது   என்னும்   அருமை     தோன்றா  நின்றது.  அத்தன்மையது
பரமபதமே  யாதலால்  அவ்வுலகம்    என்றதற்குப்  பரமபதம்  என்று
பொருள்  கூறப்பட்டது.   அவ்வுலகத்துள்ளார் நிரதிசயாநந்திகளாதலால்
வேறுலகத்தில் விருப்பம்   வையாரென்பது தோன்ற அருத்தி புரிகின்றது
என்றார்.”

உபய விபூதி  நாயகன்  பூர்ண  கலையோடு திவாகரனாய் அவதரித்த
இடமாதலால் திரு அயோத்தியை மாநகரம் என்றார்.

எவ்வுலகமும்  என்ற  தொடரமைப்பு  வினாப்   பொருளது  அன்று.
‘உம்’ சேர்ந்தமையால் எஞ்சாமைப் பொருட்டு.

அயோத்தி-யுத்தத்தால்   பிறர்   கைப்   புகாதது.  ‘கன்னி மாமதில்’
என்பதும். ‘போரருவாயில்’ என்பதும் இப்பொருளவே.

‘புண்ணியம்  புரிந்தோர் புகுவது துறக்கம்’ (97) எனவும். ‘யாவர்க்கும்
புகலிடமான   செங்கண்  மால்  பிறந்து  ஆண்டு    அளப்பருங்காலம்
திருவின்  வீற்றிருந்தனன்  என்றால்  அங்கண்மா     ஞாலத்து இந்நகர்
ஒக்கும்  பொன் நகர் அமரர் நாட்டு யாதோ (98)   எனவும் மேல்வரும்
தொடர்கள் இங்கு இணைத்து நோக்கத் தக்கன.

யாவர்க்கும்     புகலிடமான  திருமாலே     அவதரிக்கத்  தேர்ந்த
இடமாதலின் மா நகரம் என்றார். இங்கு மா  என்னும் பல பொருளொடு
சொல்    அளவையும்    பரப்பையும்      குறியாமல்   பெருமையை-
மாண்புடமையைக் குறித்தது.