அரசு எலாம் அவண - எந்நாட்டு மன்னர்களும் அங்கேயே (அயோத்தியிலேயே) உள்ளனர்; அணிஎலாம் அவண- சிறந்த அணிகலன்களெல்லாம் அங்குள்ளன; அரும்பெறல் மணிஎலாம் அவண- பெறுதற்கரிய மணிகளெல்லாம் அங்குள்ளன; புரசை மால் களிறும்- கழுத்துக் கயிற்றை உடைய மத யானைகளும்; புரவியும் தேரும்- குதிரைகளும். தேர்களும் (இவை தவிர); பூதலத்து யாவையும் அவண- உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் அங்கு உள்ளன; முனிவர் விண்ணவர் இயக்கர்- முனிவர்களும். தேவர்களும். இயக்கரும்; விஞ்சையர் முதலியோர் விரசுவார் என்றால் - அங்கு வந்து கூடியிருப்பார் என்றால்; எவரும் உரை செய்வார்- எல்லோரும் (அயோத்தியையே) சிறப்பித்துப் பேசுவாராயினர்; ஆன போது- இப்படியான போது; அதனுக்கு உவமை உளதோ- அந்த நகருக்கு உவமை கூற வேறு நகர் இருக்கிறதோ?; அரிது தான்- (அயோத்தியின் பெருமைக்கு உவமை கூறுதல் எவருக்கும்) அரியதேயாகும். பல்வேறு நாட்டுத் தலைவர்களும் அயோத்திலேயே இருப்பர் என்றது. உலக அரசியலுக்கு அயோத்தியே தலைநகர் என்றவாறு. எங்கும் சென்று வரும் தவ வலிமை மிக்க முனிவர் முதலானோர் இதுபோன்ற ஒரு நகரம் தவம் பேண இல்லாமையால் இங்கே வந்து குவிகின்றனர். இதன் சிறப்பை என்னால் கூறுதல் இயலாது என்கிறார். புரசை: யானையின் கழுத்தில் கட்டும் கயிறு. அவண: பலவின்பால் குறிப்பு வினைமுற்று.
அரைசு: எதுகை நோக்கிய திரிபு.
ஆக. அயோத்தியின் சிறப்பும் ஆன்மிகச் செல்வமும் கூறியவாறு. 7 |