காடும் புனமும் கடலன்ன கிடங்கும் - அந்நகரைச் சூழ்ந்த காடுகளிலும் கொல்லைகளிலும் கடல் போன்ற அகழியின் ஓரங்களிலும்; மாதர் ஆடும் குளனும் - பெண்கள் நீர் விளையாடும் தடாகங்களிலும்;அருவிச் சுனைக் குன்றும் - அருவிகளையும். சுனைகளையும் உடைய மலைகளிலும்; உம்பர் வீடும்- மேல் வீடுகளிலும்; விரவும் மணப்பந்தரும் - பற்பல இடங்களிலும் விரவியுள்ள முத்துப் பந்தர்களிலும்; வீணை வண்டும் பாடும் பொழிலும் - வீணை போல வண்டுகள் ரீங்காரம் செய்யும் சோலைகளிலும்; மலர்ப்பல்லவப் பள்ளி மன்னும்- (ஆகிய இடங்களிலெல்லாம்) மலர்களாலும் தளிர்களாலும் அமைந்துள்ள படுக்கைகள் நிலைத்திருக்கும். அந்நகரத்தில் வாழ்பவர்களின் செல்வச் செருக்கையும் கவலை இல்லாமையையும். களிப்பின் மிகுதியையும் காட்டி நிற்கும் பாட்டு இது. வீறு கோள் அணியாகும். மாதர்: அழகு- பண்பாகு பெயர் (பெண்களை உணர்த்தி நின்றது). பல்லவம்: இளந்தளிர். உம்பர்வீடு: மேன்மாடி. மன்னோ: அசை. 72 |