ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து - கல்வி என்னும் ஒரு வித்து ஒப்பற்றதாக முளைத்து மேலெழுந்து; எண்ணில் கேள்வி ஆகும் - எண்ணற்ற பல்நூல் கேள்வியாகிய; முதல் திண்பணை போக்கி -முதன்மையும். வலிமையும் வாய்ந்த கிளைகளை எங்கும் பரவச் செய்து; அரும் தவத்தின் சாகம் தழைத்து - அரிய தவமாகிய இலைகள் தழைத்து; அன்பு அரும்பி - எல்லா உயிர்களிடமும் செலுத்தும் அன்பாகிய அரும்பு அரும்பி; தருமம் மலர்ந்து- அறச் செயல்களாகிய மலர்கள் மலர்ந்து; போகம் கவி ஒன்று - இன்ப அநுபவம் என்னும் பழத்தை; பழுத்தது போலும் - பழுத்த பழ மரத்தைப் போன்று (அந்த அயோத்தி மாநகர்) பொலிந்து விளங்கியது. அயோத்தியின் சிறப்பைக் கூறும் இப்பாடல் முற்றுருவகம். கல்வியால் அடக்கம்; அடக்கத்தால் நல்வாழ்வு- நல்வாழ்வால் பொருள்- அற வழியே பெற்ற பொருளால் அறம். அவ்வறத்தால் இன்ப அநுபவம் கிடைக்கும் என்பதனை நயம்படக் கூறும் பாட்டு இது எனலாம். 75 |