அம்மாண் நகருக்கு அரசன் - அத்தகைய மாண்பு மிகுந்த நகரத்துக்கு அரசனாய் இருப்பவன்; அரசர்க்கு அரசன்- மன்னர்களுக் கெல்லாம் மன்னனான சக்கரவர்த்தி; மாண் தனிக் கோல்- மாட்சிமை மிக்க தனது ஒப்பில்லாத செங்கோலாகிய ஆட்சிமுறை; உலகு ஏழினும் செல்ல நின்றான்- ஏழு உலகங்களிலும் செல்லுமாறு ஆட்சி செய்து நிலைத்தவனாவான். மேலும் அவன்; இம்மாண் கதைக்கு ஓர் இறையாய- இந்தப் பெருமைபொருந்திய இராமாயணம் என்னும் கதைக்குத் தலைவனான; இராமன் என்னும் மொய்மாண் கழலோன்தரு - இராமன் என்ற பெயரை உடைய வன்மையும் பெருமையும் உள்ள வீரக்கழல் அணிந்தநம்பியைப் பெற்ற; அன்னான் நல்லற மூர்த்தி - நல்லறத்தின் வடிவமுமாவான். ‘அம்மாண்நகர்’ என்பதிலுள்ள அகரச்சுட்டு. நகரப்படலத்தில் கூறிய பெருமையை எல்லாம் குறித்து நின்றது. ‘தனி’: தயரதனது ஒப்பற்ற ஆட்சியை உணர்த்தும் ‘கோல்’: நல்லாட்சியைக் குறிக்கும் ஒரு மரபுச் சொல். இவ் வேந்தனது ஆணை எவ்வுலகினிலும் செல்லும் என்பதனை ‘உலகேழினும் செல்ல’ என்றார். இறை: தலைவன். மெய்: வலிமை. ராமன்: அழகன் என்ற பொருள் உடையச் சொல்லாகும். மூர்த்தி: உருவம் (வடிவம்). நல்லறமே திரண்டு ஓர் வடிவானவன் என்பது பொருள். 1 |