அன்னான் - மன்னர் மன்னனான அத்தயரதன்; எவர்க்கும்- தனது ஆட்சிக் கடங்கியகுடிமக்கள் எவர்க்கும்; அன்பின்தாய் ஒக்கும் -அன்பு செலுத்துவதில் பெற்ற தாயை ஒப்பவனாவான்; நலம் பயப்பின் தவம் ஒக்கும் - நன்மை செய்வதில் தவத்தைப் போன்றவனாவான்; முன்நின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரான்- தாய்தந்தையரின் கடைசிக் காலத்தில் முன்னே நின்று. இறுதிச்சடங்குகளைச் செய்து அவர்களை நற்கதியில் சேரச் செய்யும் தன்மையினால்; சேய் ஒக்கும் - அவர்கள் பெற்ற மகனை ஒத்திருப்பான்; நோய் ஒக்கும்என்னின் - குடிமக்களுக்கு நோய்வருமாயின்; மருந்து ஒக்கும் - அதைப் போக்கி. குணப்படுத்தும் மருந்து போன்றவனுமாவான்; நுணங்கு கேள்வி ஆயப்புகுந்தால்- நுணுக்கமான கல்வித்துறைகளை ஆராயப்புகும் போது; அறிவு ஒக்கும்- நுட்பமான பொருளைக் காணும் அறிவினையும் ஒத்திருப்பான். தாயன்பு சிறந்தது. “தாயினும் சாலப்பரிந்து” என. இறையன்புக்கே தாயன்பை உவமையாக கூறினர் மேலோர். தனது குடிமக்களிடம் தாய் போல் அன்புடையவன். நன்மை புரிவதில் தவம் போன்றவன்; நற்கதியடையச் செய்வதில் சேய் போன்றவன்; நோயுறும் காலை. அதைப் போக்கும் மருந்து போன்றவன்; ஆராய்ச்சிக்கு உதவும் அறிவு போன்றவன் என்றெல்லாம் தயரதனுடைய பண்பைச் சிறப்பித்துக் கூறுகிறார். குருகுமாரனான சிரவணனுடைய பெற்றோர்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து-அவர்களைச் செல்கதி உய்த்த செயல் இவனது. “சேயொக்கும்” என்பது சிறப்பாகப் பொருந்துவதொன்றுதானே! ‘அறிவு’ குணவாகு பெயராய் அறிவுடையானை உணர்த்தி நின்றது. 4 |