நனைவரு கற்பக நாட்டு நன்னகர் - அரும்புகள் விரிகின்ற கற்பக மரத்தை உடைய அமரர்கள் நாட்டு நல்ல நகரான அமராவதி நகரை; வனைதொழில் மதிமிகும் மயற்கும் - படைத்த தொழில் திறமும். அறிவும் மிகுந்த மயனுக்கும்; சிந்தையால் நினையவும் அரியது - மனத்தால் எண்ணிப் பார்க்கவும் இயலாததும்; விசும்பின் நீண்டது ஓர் - வான மளவும் உயர்ந்திருப்பதுமாகிய ஒரு; புனைமணி மண்டபம் - மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள மண்டபம்: பொலிய எய்தினான் - விளக்கமுறும்படி சேர்ந்தான். முந்திய பாடலில் குறிப்பிட்ட ‘அரசர்தம் பெருமகன்’ என்பதே இங்குக் கூறப்பட்ட ‘எய்தினான்’ என்பதற்கு எழுவாயாகும். நனை: அரும்பு. நல்+நகர்: நன்னகர் இங்கு நன்மை என்பது புண்ணியம் எனும் பொருளின் வழங்குகிறது. மண்டபம்: அரசிருக்கை. பொலிதல்: சிறத்தல். மயன்: தெய்வத்தச்சன். அமரர்கள் நாடான விண்ணுலகுக்குத் தலைநகர் அமராவதி. அதனைப் படைத்த மயனுக்கும் நினைத்துப் பார்க்கமுடியாத சிறப்புடைய மண்டபம் என்பது கருத்து. ‘மயன் வனைதொழில்’ மதிமிகும் மயன் என்று சிறப்பிக்கப்படுகிறான். மண்டபம் மன்னனது வருகையால் பொலிந்தது என்பது கருத்து. வனை தொழில்: வினைத்தொகை இப்பாட்டு உயர்வு நவிற்சியணியாகும். 2 |