மடங்கல் போல் மொய்ம்பினான் முன்னர் - சிங்கத்தைப் போன்ற வலிமை உடைய தயரதனுக்கு எதிரிலே: மன்உயிர் அடங்கலும் உலகும் - நிலைபெற்ற உயிரினங்கள் அனைத்தையும் அவை வாழும் உலகங்களையும்; வேறு அமைத்து - வேறு வேறாகப் படைத்து; தேவரோடு இடங்கொள் நான்முகனையும் - தேவர்களுடன் (எவ்வுயிரையும் பிறப்பிடமாகக் கொண்ட பிரமனையும்; ஈண்டு படைப்பென் எனா - இப்போதே படைப்பேன் என்று; தொடங்கிய துனியுறு முனிவன் தோன்றினான் - தொடங்கியவனான சினத்தை உடைய விசுவாமித்திர முனிவன் வந்து தோன்றினான். மடங்கல்: சிங்கம். மொய்ம்பு வலிமை. அடங்கல்: எல்லாம். இடம் பிறப்பிடம். தொடங்கிய: பெயரெச்சம். துணி: பிணக்கு-சினம். திரிசங்கு மன்னனுக்குத் தேவர்கள் தங்களுலகுக்குள் நுழைய விடமாட்டோம் என மறுத்தபோது - வேறு அண்டங்களையும் நான்முகன் முதலான தேவர்களையும் நான் படைப்பேன் - எனத் தொடங்கிய தவ வலிமை மிக்கவன் விசுவாமித்திர முனிவன் என்பதைக் கூறி அம்முனிவனை முதன்முதலாக அறிமுகப்படுத்துகிறார். தயரதனை இந்திரனுக்கு ஒப்பாகக் கூறியவர். இப்பாடலில் விசுவாமித்திரனை. பிரமனுக்கு ஒப்பாக கூறுவதைக் காண்கிறோம். பிரமனது புத்திரன் குசன். அவனது புத்திரன் குசநாபன். இவன் மகன் காதி. காதியின் மகன் கௌசிகன். அரசனான கௌசிகன் தவம் செய்து சிறந்த முனிவனானான் என்பது புராணச் செய்தி. 4 |