நெடியோய். நகர் யான் வலம் செய்து வணங்க - நீண்ட தவம் உடையீர்! இந்த நகரத்திலே நான் வலம் வந்து வணங்கும்படியாக; நீ எளிவந்த இது - தாங்கள் எளிமையாக வந்த இந்தச் செயலானது; நிலம் செய்தவம் என்று உணரின் அன்று - இந்த நாடு செய்த தவப்பயன் தானோ எனில் அல்ல; என் நலம் செய்வினை உண்டு எனினும் அன்று - எனது நல்வினை செய்து காட்டிய பயனாலோ என்றால் அல்ல; எம்முந்து குலம் செய்தவம் - எங்களது முந்திய குலத்தினோர் செய்த தவப்பயனே யாகும்; என்று இனிது கூற முனி கூறும் - என்று தயரதன் இனிய முகமன்கூற. அதனைக் கேட்ட முனிவன் கூறுவான். நிலம்: இடவாகு பெயராய் மக்களை உணர்த்திற்று. செய்தவம்: வினைத்தொகை ‘தவம்’ தவப்பயன் அல்லது புண்ணியமும் ஆம். வலம்: வலம் வருதல். எளிமை: சுலபம். தயரதன். முனிவனை நோக்கி ‘’நெடியோய்’’ என்றது. நீண்ட தவத்தை உணர்த்தி நின்றது. 7 |