மின்னும் வாள் வில்லொடு மிடைந்து உலாவிட - மின்னுகின்ற வாட்கள் விற்களுடன் கலந்து பெயர்ந்துவர; கடிப்பினில் பல்இயம் இடிக்கும் - குறுந்தடிகளால் பலவகை வாத்தியங்களை அடித்துக் கொண்டு வரும்; பல்படை ஒல் என உரறிய - பலவிதமான படைகள் ‘ஒல்’ என்று ஒலித்தன; ஊழிப் பேர்ச்சியுள் - (இச் செயல்) யுகம் முடியும் காலத்தில்; வல்லை வந்து எழுந்ததோர் - உலகை முடிக்க. விரைந்து எழுந்து வந்த ஒரு; மழையும் போன்றது - பெருமழை போலவும் காணப்பட்டது. மின்னுவாள்: வினைத்தொகை. மின்னு: உகரம் சாரியை. வில். வாள் என்பன ஒளி என்னும் பொருள் கொண்டனவாம். ஒல்: ஒலிக்குறிப்பு. உலாவுதல்: பெயர்தல். உரறிய: ஒலித்த. ஊழிப்பேர்ச்சி: யுகம் முடிவு. வல்லை: விரைவு. ஓர்: ஒப்பற்ற. ‘மழையும்’ இதில் உம்மை. இறந்தது தழிஇய எச்ச உம்மை. வந்தெழுந்தது: எழுந்து வந்தது (சொல் மாற்று). வில்லும். வாளும் உலாவ. பலவகை வாத்தியங்கள் ஒலிக்க வந்த படைகள் - ஒலித்த ஒலியால் ஊழிப் பெருங்காலத்தில் விரைந்து வந்த மேகம் போலவும் இருந்தது என்பது கருத்து. அரக்கர் சேனையின் போர்த்திறம் மூன்று செய்யுள்களால் கூறப்பட்டதாம். 45 |