தூம வேல் அரக்கர் தம் - புகை காலும் வேலையுடைய அவ்வரக்கரது; நிணமும் சோரியும் - சதைத் துண்டங்களும் இரத்தமும்; ஓம வெம் கனல் இடை உகும் - தூய வேள்வித் தீயிலே சிதறி விழக்கூடும்; என்று உன்னியே - என்று நினைத்தவனாய்; தாமரைக் கண்ணனும் - தாமரை மலர் போன்ற கண்களை உடைய இராபிரான்; சரங்களே கொடு - தனது அம்புகளைக் கொண்டே; கோமுனி இருக்கை - அரச முனிவனான விசுவாமித்திரனுடைய இருப்பிடத்தை; ஓர் கூடம் ஆக்கினான் - ஒரு கூடாராமாகக் செய்து விட்டான். தூமம்: புகை. நிணம்: உடற்சதை. சோரி: இரத்தம். ஓமம்: வேள்வி. உன்னி: நினைத்து. வெங்கனல்: பண்புத்தொகை. இருக்கை: இருப்பிடம். அரக்கரது நிணமும். ரத்தமும் வேள்வித் தீயில் விழாதபடி. இராமன் முனிவரது இருக்கையை. அம்புகளாலேயே ஒரு கூடாரமாக்கினான் என்பது கருத்து. 48 |