கலங்கலீர் என - முனிவர்களே! கலக்கமுறாதீர்கள் என்று கூறி; கரதலம் கவித்தனன் - கைகளைக் கவித்து அவர்களை அமர்த்திய இராமபிரான்; சிலையின் தெய்வ நாண் - தனது வில்லின் தெய்வீகமான நாணை; செவித்தலம் நிறுத்தினன் - காதுவரை இழுத்து நிறுத்தினவனாய்; புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினான் - அந்தக் காட்டினையே இரத்தக் கடலாக்கினவனாய்; அரக்கர் தம் சிரத்தின் குன்றம் குவித்தனன் - அரக்கர்களின் தலைகளை மலையாகக் குவித்து விட்டான். கவித்தல்: அமர்த்தல். கரதலம்: உள்ளங்கை. செவித்தலம்: இரு பெயரொட்டுப் பண்புத் தொகை. நாண்: கயிறு. குருதி: இரத்தம். புணரி: கடல். சிரத்தின் குன்றம்: உருவகம் கலங்காதீர்கள் எனக் கூறி. கையமர்த்தி வில்லின் நாணைக் காதுவரை இழுத்து நிறுத்தி - அந்தக் காட்டையே இரத்தக் கடலாக்கி - அரக்கர்களின் தலை மலைகளைக் குவித்துவிட்டான் இராமபிரான் என்பது கருத்து. 50 |