திருமகள் நாயகன் - இலக்குமி கேள்வனாகிய இராமபிரானுடைய; தெய்வவாளிதான் - தெய்வத்தன்மை வாய்ந்த அம்பானது வெரு வரு தாடகை பயந்த - மூவுலகும் அஞ்சும்படியான தாடகை பெற்ற; வீரர்கள் இருவரில் - வீரர்களான சுபாகு. மாரீசன் என்னும் இரண்டு பேரில்; ஒருவனைக் கடலில் இட்டது - ஒருவனான மாரீசனைக் கடலில் தள்ளிவிட்டது; அங்கு ஒருவனை - மற்றவனான சுபாகு என்பவனை; அந்தக புரத்தில் உய்த்தது - எம்புரியில் கொண்டு போய்ச் சேர்த்தது. திருமகள் நாயகன் திருமால்: திருவின் அவதாரமான ராமனை இப்பெயரால் குறிப்பிட்டார். முன்பும் ‘’திருமாலின் கேள்வன் என்றது நினைவுகூரத் தக்கது. தெய்வ வாளி: தெய்வத்தன்மை வாய்ந்த அம்பு. அந்தகன்: எமன். புரம்: ஊர். உய்த்தல்: செலுத்துதல். ராமபிரானது தெய்வத்தன்மை வாய்ந்த அம்பு தாடகையின் பிள்ளைகளில் ஒருவனைக்கடலில் சேர்த்தது. மற்றொருவனை அந்தகனூர்க்குக் கொண்டு போய்ச் சேர்த்தது என்பது கருத்து. 51 |